சிறுமிக்கு செலுத்தப்பட்ட ஊசி கண்டுபிடிக்க முடியாமல் திணறல்

by Staff / 29-09-2022 04:06:41pm
சிறுமிக்கு செலுத்தப்பட்ட ஊசி கண்டுபிடிக்க முடியாமல் திணறல்

விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த கிளியனுார் பகுதியைச் சேர்ந்தவர் சுகுமார். ஆட்டோ டிரைவர். இவரது மகள் சஞ்சனா, 5; தைலாபுரம் அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு, சஞ்சனாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. சிறுமியை உப்புவேலுார் அரசு மருத்துவமனையில் ஆண் செலவிலிய உதவியாளராக பணிபுரிந்து வரும் கணேசன், 54. என்பவர் தைலாபுரம் வீட்டில் நடத்தி வரும் கிளினிக்கிற்கு பெற்றோர் அழைத்துச் சென்றனர். அங்கு, சிறுமிக்கு, கணேசன் ஊசி போட்டுள்ளார்.
அந்த இடத்தில் அவருக்கு கொப்பளம் ஏற்பட்டு, வலி வந்துள்ளது. ஓரிரு தினங்களில், சஞ்சனாவின் உடல் மற்றும் தலைப்பகுதிகளில் ஆங்காங்கே கறுப்பு நிறமாக மாறி, தொற்று ஏற்பட்டுள்ளது. அதிர்ச்சியடைந்த பெற்றோர், சிறுமியை, தைலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதற்கிடையே கணேசன் மீது சுகுமார், கிளியனுார் போலீசில் புகார் அளித்தார். போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து, கணேசன் நடத்தி வந்த கிளினிக்கிற்கு சீல் வைத்தனர். ஆனால், போலீசார் இதுவரை கணேசனை கைது செய்யவில்லை. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள கணேசன், சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது உறவினர்கள் போலீசாரிடம் கூறியுள்ளனர்.

இதனிடையே சிகிச்சை பெற்று வரும் சிறுமிக்கு, நேற்று மதியம் தொற்று அதிகரித்து, உடலில் மருந்து ஏற்றுக்கொள்ளவில்லை என டாக்டர்கள் கூறியுள்ளனர். அதன் பிறகு காலில் உள்ள நரம்பு வழியாக மருந்து செலுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சிறுமியின் உறவினர்கள் தெரிவித்தனர்.
சிறுமிக்கு செலுத்தப்பட்ட ஊசியின் பெயரை கண்டறிந்து, அதற்கு தகுந்தார் போல், சிகிச்சை அளிக்க டாக்டர்கள் முடிவு செய்தனர். இதற்காக தொற்று ஏற்படுவதற்கு முன்பு செலுத்திய ஊசியின் பெயரை பெற்றோரிடம் கேட்டுள்ளனர். அவர்களுக்கு தெரியவில்லை. இதற்கிடையே கிளியனுார் மருத்துவ அலுவலர், கணேசனை தொடர்பு கொண்டு, நடந்த சம்பவம் குறித்து விசாரித்துள்ளார். அதில், நான் சிறுமிக்கு ஊசியே போடவில்லை என கணேசன் அழுத்தமாக தெரிவித்துள்ளார். இதன் காரணமாக சிறுமிக்கு, செலுத்தப்பட்ட ஊசியின் பெயரை கண்டுபிடிக்க முடியாமல் டாக்டர்கள் திணறி வருகின்றனர்.

கிளியனுார் டாக்டர் ஜெயப்பிரகாஷ் கூறுகையில், 'சாதாரண காய்ச்சலுக்கு ஊசி போடுவது வழக்கம். ஆனால், 5 வயது சிறுமிக்கு காய்ச்சல் ஏற்பட்டால், ஊசி போடுவதை தவிர்த்து விடுகிறோம். ஒருவருக்கு ஊசி போட்டால், அந்த இடத்தில் வலி ஏற்பட்டு, கொப்பளமாக மாறும். உடனடியாக சரியாகி விடும். சிறுமி சஞ்சனாவுக்கு செலுத்தப்பட்ட ஊசி எந்த வகையானது என்று தெரியவில்லை. முதலில் ஊசி போட்ட இடத்தில் கொப்பளம் இருந்துள்ளது. பின், (sesis) தொற்றாக மாறி உடல் முழுதும் பரவியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பிறகு கணேசன், 10 நாள் மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார். உரிய விசாரணை நடத்தி, அவர் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்' என்றார்.

தவறான ஊசி போட்டதால் சஞ்சனா என்ற சிறுமி, தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளார். செவிலிய ஆண் உதவியாளர் அளித்த சிகிச்சையால், சிறுமி கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பது, பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்று, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள குக்கிராமங்களில், போலி டாக்டர்கள் உலா வருகின்றனர். இச்சம்பவத்தின் எதிரொலியாக, மாவட்டத்தில் உள்ள, போலி டாக்டர்கள் குறித்து விபரங்களை சேகரிக்கும் படி, அந்தந்த மருத்துவ அலுவலர்களுக்கும், மாவட்ட பொது மருத்துவம் மற்றும் நோய் தடுப்பு துறை துணை இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

Tags :

Share via