திருச்சி அருகே குளோரோபார்ம் ஏற்றி சென்ற லாரியில் தீவிபத்து

by Admin / 03-08-2021 12:53:39pm
திருச்சி அருகே குளோரோபார்ம் ஏற்றி சென்ற லாரியில் தீவிபத்து



   
திருச்சி அருகே குளோரோபார்ம் ஏற்றி சென்ற லாரியில் ஏற்பட்ட தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.

புதுச்சேரியில் இருந்து தூத்துக்குடிக்கு திரவ குளோரோபார்ம் ஏற்றிய ஒரு லாரி புறப்பட்டது. லாரியை கடலூரை சேர்ந்த சேகர் என்பவர் ஓட்டி சென்றார்.
 
இந்த லாரி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6.15 மணி அளவில் திருச்சி- மதுரை பைபாஸ் சாலையில் அளுந்தூர் பவர்கிரிட் அருகாமையில் சென்றபோது டிரைவர் கேபினில் இருந்து திடீரென கரும்புகை கிளம்பியது.

அதிர்ச்சி அடைந்த டிரைவர் உடனடியாக லாரியை சாலையோரம் நிறுத்தினார். பின்னர் இது பற்றி திருச்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த நிலைய அலுவலர் மில்க்யுராஜ் தலைமையிலான தீயணைப்புப்படை வீரர்கள் உடனே சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

பின்னர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். கேபினில் மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டதாக மில்க்யுராஜ் தெரிவித்தார். இந்த குளோரோபார்ம் தூத்துக்குடியில் உள்ள ஒரு தொழிற்சாலைக்கு கொண்டு செல்லப்படுகிறது. மருத்துவத்துறையில் குளோரோபார்ம் ஆபரேசன் செய்யும் நோயாளிகளுக்கு மயக்க மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

குளோரோபார்மில் தீ பரவி இருந்தாலோ, கசிவு ஏற்பட்டு இருந்தாலோ அது காற்றில் கலந்து அப்பகுதி பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் மற்றும் மயக்கம் ஏற்பட்டு இருக்கும். கால்நடைகளையும் பாதித்து இருக்கும். ஆனால் அதிர்ஷ்டவசமாக கேபினில் இருந்து தீ வேறு எங்கும் பரவவில்லை என தீயணைப்புப்படை வீரர்கள் தெரிவித்தனர்.

 

Tags :

Share via