இவர்கள் பார்வையில்  இடைக்கால பட்ஜெட்..

by Editor / 01-02-2024 11:58:00pm
இவர்கள் பார்வையில்  இடைக்கால பட்ஜெட்..

இடைக்கால பட்ஜெட் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், ஆறு கோடிக்கும் அதிகமான தொழிலாளர்களின் வேலை பறிக்கப்பட்டிருப்பது குறித்து கவலைப்படாமல் கார்ப்பரேட்டுகளுக்கு வரி குறைக்கப்பட்டு, மேலும் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. உழைக்கும் மக்களின் உணர்வுகளை கருத்தில் கொள்ளாத நிதிநிலை அறிக்கை, ராமர் கோவிலையும், அதனை சுற்றி கட்டமைக்கப்படும் அரசியல் வியூகத்தையும் வார்த்தை ஜாலங்களில் கட்டமைத்துள்ளது. கானல் நீர் காட்டி தாகம் தீர்க்க முயலும் பட்ஜெட் இது என்று விமர்சித்துள்ளார்.


இடைக்கால பட்ஜெட் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், வாய்ச்சவடால்களை தவிர இடைக்கால பட்ஜெட்டில் எதுவும் இல்லை. கடந்த காலத்தைப் போலவே இது ஏழைகளுக்கும், நடுத்தர மக்களுக்கும், குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கும், விவசாயத்துக்கும், பெண்களுக்கும் எதிரான பட்ஜெட்டாகும். பெருமுதலாளிகளுக்கும், அந்நிய மூலதனங்களுக்கும் அள்ளிக் கொடுக்கும் கொள்கை தொடரும் என்பதே இதன் பொருள் என்று சாடியுள்ளார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் நிதியமைச்சர் பா.சிதம்பரம், யுபிஏ அரசாங்கம் 2013 14 நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சியை 6.4% ஆகவும் சராசரி வளர்ச்சியை 7.5% ஆகவும் வைத்து சென்ற நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஜிடிபி வளர்ச்சியை 6 சதவீதத்திற்கு கீழாக குறைத்துள்ளது. விவசாயிகள் பற்றி பேசிய நிதி அமைச்சர் விவசாயிகள் தற்கொலை குறித்து ஒரு வார்த்தை கூட ஏன் பேசவில்லை என விமர்சித்தார்.


மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் குறித்து X தளத்தில் கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஒன்றிய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் மீண்டும் தமிழ்நாட்டை பாசிஸ்ட்டுகள் புறக்கணித்திருக்கிறார்கள். எவ்வளவு மரியாதை கொடுத்தாலும், நிதி மட்டும் கொடுக்கவே மாட்டோம் என்கிற அவர்களின் நிலைப்பாட்டை வன்மையாகக் கண்டிக்கிறோம். 2047-ல் இந்தியாவை வல்லரசு ஆக்குவோம் என்று மீண்டும் ஒருமுறை அல்வா கிண்டியுள்ளார்கள். இடைக்கால பட்ஜெட்டில் கைவிரித்த பாசிஸ்ட்டுகளை, இனி எக்காலத்துக்கும் எழ முடியாத அளவுக்கு இந்திய மக்கள் வீழ்த்துவது உறுதி'' என பதிவிட்டுள்ளார்.


இடைக்கால பட்ஜெட் குறித்து விசிக தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, ஒரு வெற்று அறிக்கை இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைவரையுமே ஏமாற்றக்கூடிய வகையில் இது இருந்தது. பாஜகவினரையே அதிர்ச்சியடையக்கூடிய வகையில் ஒன்றுமில்லாத பட்ஜெட்டாக இது அமைந்துள்ளது. இந்த பட்ஜெட்டுக்கு பிறகு நேரடியாக தேர்தலை சந்திக்கிற இருக்கும் நிலையில் பாஜக தடுமாறி போய் இருக்கிறது. தேர்தலை சந்திப்பதில் அவர்களுக்கு மிகப்பெரிய நெருக்கடி உருவாகியிருப்பதை இது உணர்த்துகிறது என்று தெரிவித்தார்.


 

 

Tags :

Share via