அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால், ஜெயராஜ், பென்னிக்ஸ் சம்பவம் நடந்து இருக்காது’.யாக்கோப்ராஜ்பரபரப்பு பேட்டி 

by Editor / 08-02-2024 10:39:23pm
அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால், ஜெயராஜ், பென்னிக்ஸ் சம்பவம் நடந்து இருக்காது’.யாக்கோப்ராஜ்பரபரப்பு பேட்டி 

துாத்துக்கடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மகன் பென்னிக்ஸ். இவர்கள், சாத்தான்குளத்தில் செல்போன் கடை வைத்திருந்தனர். கடந்த 2020 ஜூன் 19ம் தேதி கொரோனா ஊரடங்கு காலத்தில் நிபந்தனையை மீறி கடையை திறந்து வைத்ததாககூறி ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய 2 பேரையும் போலீசார் அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அடுத்தடுத்து, கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் இறந்தனர். 
இந்த வழக்க தொடர்பாக, அப்போதைய சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.,க்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உட்பட 9 பேரை சி.பி.ஐ., கைது செய்தது. இந்த வழக்கு மக்களிடையே, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்த வழக்கிலிருந்து, சாத்தான்குளம் போலீசார் மீது அடுக்கடுக்கான புகார்கள் அந்த பகுதியிலிருந்து வெளி வந்தன. அதில், ஒன்றுதான் கார்பென்டரான மகேந்திரன் போலீசாரால் தாக்கப்பட்டு இறந்த வழக்கு. பாதிக்கப்பட்ட மகேந்திரனின் தாயார் வடிவு மதுரை ஐகோர்ட் கிளையில், வழக்கு தொடர்ந்தார். 

அதில், சாத்தான்குளம் ஆசீர்வாதபுரம் தெற்கு பேய்க்குளத்தை சேர்ந்தவர் வடிவு. விதவை. இவரது மகன்கள் துரை, மகேந்திரன். மகள் சந்தனம். தெற்கு பேய்க்குளத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் கொலை தொடர்பாக, துரையைச் தேடி 2020ம் ஆண்டு மே 22ம் தேதி எஸ்.ஐ., ரகுகணேஷ் தலைமையில் போலீசார் அவரது வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு துரை இல்லை. நெல்லை மாவட்ட பாப்பான்குளத்தில் உள்ள வடிவுவின் தங்கை வீட்டில் தங்கியிருந்து வேலை பார்த்து வருவதாக போலீசாரிடம் வடிவு கூறியுள்ளார். மறுநாள் 23ம் தேதி காலை போலீசார் அங்கு சென்று துாங்கிக் கொண்டு இருந்த மகேந்திரனை அடித்து உதைத்து இழுத்துச் சென்றுள்ளனர். 

துரை வந்தால்தான் மகேந்திரனை விடுவோம் என்று போலீசார் அங்கிருந்தவர்களிடம் எச்சரித்து சென்றுள்ளனர். இந்த நிலையில், மகேந்திரனை போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டு, மோசமான நிலையில், 24ம் தேதி இரவு 10:30 மணிக்கு விடுவித்து இருக்கிறார்கள். 

மகேந்திரன் கடுமையாக தாக்கப்பட்டதால், உடல் மோசமான நிலையில், வேலைக்கு சென்று இருந்த இடத்தில்  ஜூன் 10ம் தேதி  மயக்கம் போட்டு விழுந்துள்ளார்  அவரை 11ம் தேதி துாத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தநிலையில் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி 2 நாட்கள் கழித்து, 13ம் தேதி மகேந்திரன் இறந்தார். 

போலீசார் தலையிட்டு, மகேந்திரனின் உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் கொடுத்தனர். எனது மகனை சாத்தான்குளம் போலீசார்தான் கொலை செய்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிப்பதாக அரசு தரப்பில் தெரிவித்தனர். இந்த வழக்கில், இன்று கோவில்பட்டி ஜே.எம்.1ல் நீதிபதி கடற்கரை செல்வம் முன் சாட்சியம் அளிப்பதற்காக யாக்கோப்ராஜ் வந்தார். 

அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘ நான் பனையேறு தொழில் செய்து வருகிறேன். 2020ம் மே 23ம் தேதி 7 மணிக்கு டிரான்ஸ்பார்மரில் பீஸ் போட்டு கொண்டு இருந்தபோது, என் மீது இடிப்பதுபோல் கார் வேகமாக வந்தது. காரில் இருந்து சாதாரண உடையில் இறங்கிய எஸ்.ஐ., ரகுகணேஷ் என்னை இழுத்து சென்று காரில் ஏற்றினார். 

என்னை காட்டுப் பகுதியில் இறக்கி முழு நிர்வாணப்படுத்தி சுமார் அரைமணி நேரம் அடித்தனர். பின்னர், போலீஸ் ஸ்டோஷனுக்கு கொண்டு சென்று இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் முன் நிறுத்தி மீண்டும் அடித்தனர். 
பின்னர், ஸ்டேஷன் செல்லில் அடைத்தனர். காலை 4 மணிக்கு நான் எழுந்து பார்த்தபோது, எனது காலுக்கு அடியில் தங்கவேலு என்பவர் இருந்தார். மேலே உள்ள அறையில் போலீசாரால் தாக்கப்பட்டு, அலறல் சத்தம் வந்தது. அப்போதுதான் அருகில் இருந்த தங்கவேலு, எனது மருமகனைத்தான் அடிக்கிறார்கள். எதற்காக, அடிக்கிறார்கள் என்று தெரியவில்லை என்றார். 

இந்த நிலையில், என்னை வழிபறி செய்ததாகக்கூறி போலீசார் சிறையில் அடைத்துவிட்டனர். அதிகமாக அடித்து துன்புறுத்தி மகேந்திரனை வெளியே விட்டுவிட்டனர். அதில், போலீசார் அடித்து துன்புறுத்திய மகேந்திரனிடம் ரூ. 500 வழிபறி செய்ததாக போலீசார் பொய் வழக்கு பதிவு செய்தனர். 
மகேந்திரனை நான் பார்த்ததுகூட கிடையாது. இந்த நிலையில், அந்த வழக்கில் நான் சாட்சியம் அளிக்க வந்துள்ளேன். இந்த வழக்கில், போலீஸ் உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால், ஜெயராஜ், பென்னிக்ஸ் சம்பவம் நடந்து இருக்காது’. என்றார்.

 

Tags :  மகேந்திரன் மரண வழக்கில் கோவில்பட்டி நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்க வந்த யாக்கோப்ராஜ்பரபரப்பு பேட்டி 

Share via