பகவதிபுரம் - எடமன் ரயில் பிரிவில் மின்மயமாக்கல் பணிகள் நிறைவு பெற்றது. 

by Editor / 27-02-2024 11:37:47pm
பகவதிபுரம் - எடமன் ரயில் பிரிவில் மின்மயமாக்கல் பணிகள் நிறைவு பெற்றது. 

செங்கோட்டை அருகே உள்ள அதிக வளைவுகள் கொண்ட மலைப் பாதையான கேரளா மாநிலப் பகுதியான பகவதிபுரம் -  எடமன் ரயில் நிலையங்களுக்கு இடையேயான ரயில் பாதையில் மின் மயமாக்கல் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இந்த 34.67 கிமீ தூர புதிய மின்மயமாக்க ப்பட்ட ஆக்கப்பட்ட ரயில் பாதையை தெற்கு ரயில்வே தலைமை முதன்மை மின்சார பொறியாளர் ஏ.கே.சித்தார்த்தா செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 27) அன்று ஆய்வு செய்தார். சிறப்பு ஆய்வு ரயில் மூலம் பகவதிபுரத்தில் இருந்து காலை 09.55 மணிக்கு ஆய்வு துவங்கியது. இந்த ரயில் பாதையில் மின் வழித்தடங்கள் பாதுகாப்பான தரத்துடன் அமைக்கப்பட்டுள்ளதா எனவும் ஆய்வு செய்தார். பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த ரயில் பாதையில் உள்ள நீண்ட குகைகள், பாலங்கள், மாநில அரசின் உயர் அழுத்த மின்வழித்தடங்கள், நடைமேம்பாலங்கள் ஆகிய பகுதிகளில் அங்கீகரிக்கப்பட்ட முறையில் மின் வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளதா எனவும் ஆய்வு செய்தார். புதிய ஆரியங்காவு, தென்மலை, எடமன் ஆகிய ரயில் நிலையங்களில் அமைந்துள்ள மின்விசை நிலையங்களையும் ஆய்வு செய்தார். ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மின் பராமரிப்பு கருவிகள் மற்றும் பாதுகாப்பு கருவிகளையும் ஆய்வு செய்தார். இந்த சட்டப்பூர்வ ஆய்வு எடமன் ரயில் நிலையத்தில் மாலை 04.00 மணிக்கு நிறைவடைந்தது. பின்பு மின்பாதையில் 25,000 வாட்ஸ் மின்சாரம் பாய்ச்சப்பட்டு எடமன் ரயில் நிலையத்திலிருந்து பகவதிபுரம் வரை மின்சார ரயிலை இயக்கி ஆய்வு செய்தார். ஆய்வின் போது மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீ வத்சவா, மின் மயமாக்கல் முதன்மை திட்ட இயக்குனர் சமீர் டிஹே, இணை முதன்மை மின்சாரப் பொறியாளர் எம்.எஸ். ரோஹன், உதவி மின் பொறியாளர் கே. நாராயன் ஆகியோர் உடன் இருந்தனர்.

 

Tags : பகவதிபுரம் - எடமன் ரயில் பிரிவில் மின்மயமாக்கல் பணிகள் நிறைவு பெற்றது 

Share via