தினந்தோறும் வீட்டுக்குள் நுழைந்து உணவு சாப்பிட்டு, ஓய்வெடுக்கும் பசுமாடு

by Admin / 04-08-2021 04:45:10pm
தினந்தோறும் வீட்டுக்குள் நுழைந்து உணவு சாப்பிட்டு, ஓய்வெடுக்கும் பசுமாடு

 



   
மதுரையில் தினமும் தவறாமல் வீட்டுக்கு வரும் பசுமாட்டுக்கு பெண் ஒருவர் உணவு கொடுத்து உபசரித்து வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை ஜெய்ஹிந்துபுரம் ராமையா தெரு பகுதியில் உள்ள தென்நகரத்தை சேர்ந்தவர் பரஞ்ஜோதி, காய்கறி வியாபாரி. இவரது மனைவி மகேஸ்வரி (வயது 43). இவர்களுக்கு முத்துக் கனி, காளிபாண்டி என்ற மகன்கள் உள்ளனர். 2 பேரும் பட்டப்படிப்பு முடித்துள்ளனர்.
 
கணவர், மகன்கள் வேலைக்கு சென்றுவிட மகேஸ்வரி வீட்டு வேலைகளை பார்த்து வருவது வழக்கம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது வீட்டு முன்பு அதே பகுதியில் சுற்றித்திரிந்த பசுமாடு ஒன்று நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தது.

இதை பார்த்த மகேஸ்வரி வீட்டில் இருந்த உணவை அந்த பசுவுக்கு வழங்கியுள்ளார். அதனை சாப்பிட்டு சென்ற பசு மறுநாளும் மகேஸ்வரி வீட்டு முன்பு வந்து நின்றது. அவரும் அப்போது உணவு வழங்கியுள்ளார்.

இவ்வாறு அந்த பசுமாடு தினமும் மகேஸ்வரியின் வீட்டு முன்பு நிற்க, அதனை பார்த்து பரிதாபபட்டு மகேஸ்வரியும் உணவு வழங்கி வந்துள்ளார். திடீரென்று ஒருநாள் அந்த பசுமாடு மகேஸ்வரி வீட்டுக்குள் வந்துவிட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த மகேஸ்வரி, பசு மாட்டை வெளியேற்ற நினைத்தார். ஆனால் பசு வீட்டுக்குள்ளே அமர்ந்து ஓய்வெடுத்தது. இதனால் செய்வதறியாது தவித்த மகேஸ்வரி பின்னர் பசுவுக்கு உணவு வழங்கினார். அதனை தொடர்ந்து ஒரு மணிநேரத்துக்கும் மேல் வீட்டில் இருந்த பசு பின்னர் தானாகவே வெளியேறியது.

இதனை பசுவும் வழக்கமாக பழக்கப்படுத்தி கொண்டது. முதலில் இதற்கு மகேஸ்வரியின் கணவர் மற்றும் மகன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை மகேஸ்வரி வாயில்லா ஜீவன் உணவு தேடி நமது வீட்டுக்கு வருகிறது என கூறி சமாதானப்படுத்தியுள்ளார். அதன்பின் அவர்களும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தற்போது வரை மகேஸ்வரியின் வீட்டுக்கு அந்த பசுமாடு வந்து செல்கிறது. இதனை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.

எங்கள் பகுதியில் தினமும் மாடுகள் சுற்றித் திரியும். ஆனால் இந்த பசுமாடு மட்டும் என் வீட்டு முன்பு வந்து நின்றது. பரிதாபமாக நீண்ட நேரம் நிற்கும் அதற்கு உணவு வழங்கினேன். இதனை அந்த பசு பழக்கப்படுத்தி கொண்டது. நானும் தினமும் அதற்கு தவறாமல் உணவு வழங்கி வருகிறேன்.

பின்னர் வீட்டுக்குள்ளேயே வந்துவிட்டது. தற்போது அந்த பசுவை நாங்கள் எங்கள் குடும்ப உறுப்பினர் போல நினைத்து உணவு வழங்கி வருகிறோம். தினமும் காலை அல்லது மதியத்திற்குள் பசு வந்துவிடும்.

ஒரு நாள் பகல் முழுவதும் வரவில்லை. ஆனால் அன்று இரவு 10 மணிக்கு மேல் வீட்டு முன்பு வந்து கத்தியது. இதையடுத்து  கதவை திறந்து பசுவுக்கு உணவு வழங்கினேன் என மகேஸ்வரி நெகிழ்ச்சியுடன் கூறினார்.

 

Tags :

Share via