அமெரிக்காவில் மீண்டும் கரோனா அபாயம்: படுக்கையின்றி மக்கள் தவிப்பு

by Admin / 09-08-2021 01:17:43pm
அமெரிக்காவில் மீண்டும் கரோனா அபாயம்: படுக்கையின்றி மக்கள் தவிப்பு

டெக்ஸாஸ் தலைநகரில் கரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், தீவிர சிகிச்சை பிரிவுக்கான படுக்கைகளின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் குறைந்துள்ளது.

உலகம் முழுவதும் டெல்டா வகை கரோனா வேகமாக பரவிவருகின்றது. ஆஸ்திரேலியா, சீனா ஆகிய நாடுகள் அதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறிவருகிறது. இந்நிலையில், அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாகாணத்தில் டெல்டா பரவல் மருத்துவ சுகாதார கட்டமைப்பை திணறவைத்துள்ளது.

டெக்ஸாஸ் மாகாணத்தின் தலைநகரான ஆஸ்டினில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கை 6ஆக குறைந்துள்ளது. நிலைமை மோசமடைந்ததை தொடர்ந்து, மக்களுக்கு கரோனா அபாயம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 24 லட்சம் பேர் வாழும் ஆஸ்டின் நகரில் தீவிர சிகிச்சை பிரிவில் 6 படுக்கைகள் மட்டுமே மீதமுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதேபோல், சிகிச்சை அளிப்பதற்கு 313 செயற்கை சுவாச கருவி மட்டுமே தற்போது இருப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பொது சுகாதார மருத்துவ இயக்குநர் டெஸ்மர் வாக்ஸ் வெளியிட்ட அறிக்கையில், "தற்போது, நிலைமை மோசமாக உள்ளது. பேரழிவு ஏற்பட வாய்ப்புள்ளது என மக்களுக்கு குறுஞ்செய்தி, இமெயில், போன்கால்கள் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் நோயாளிகள் நிரம்பிவழிகின்றனர். மருத்துவ கட்டமைப்பு பெரும் அழுத்தத்தை சந்தித்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. எனவே, மருத்துவர்களின் சுமையை குறைக்க நம்மிடம் போதுமான வசதி இல்லை" என்றார்.

 

Tags :

Share via