ராம்ராஜ்‌ காட்டன்‌ நிறுவனத்தின்‌  முத்திரையுடன்‌ போலி முகக்கவசம்: ஒருவர் கைது

by Editor / 09-08-2021 04:28:02pm
ராம்ராஜ்‌ காட்டன்‌ நிறுவனத்தின்‌  முத்திரையுடன்‌ போலி முகக்கவசம்: ஒருவர் கைது

 



 சென்னை பூந்தமல்லி பகுதியில்‌ ராம்ராஜ்‌ காட்டன்‌ நிறுவனத்தின்‌ முத்திரையை பயன்படுத்தி போலியாக முககவசங்களை தயாரித்தவர் கைது செய்யப்பட்டார். திருப்பூரை தலைமையிடமாகக்‌ கொண்டு செயல்பட்டு வரும்‌ ராம்ராஜ்‌ காட்டன்‌ நிறுவனம்‌ 3 அடுக்கு பாதுகாப்பு கொண்ட பாதுகாப்பு முககவசங்களை தயார்‌ செய்து விற்பனை செய்து வருகிறது. இவை சட்டப்படி காப்புரிமை மற்றும்‌ டிரேட்மார்க்‌ அங்கீகாரம்‌ பெற்றதாகும்‌. இந்த முககவசத்தில்‌ அந்த நிறுவனத்தின்‌ டிரேட்மார்க்‌ முத்திரையான ஆர்ஆர் என்று லோகோ பொறிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின்‌ லோகோவை சட்டவிரோதமாக பயன்படுத்தி போலியாக பாதுகாப்பற்ற தரம்‌ குறைந்த முககவசங்களை தயார்‌ செய்து அதை கதிர்வேலன்‌ பேப்பர் ஸ்டோர்ஸ்‌ என்ற வாட்ஸ்‌அப்‌ முகவரியில்‌ விற்பனைக்கு உள்ளதாக விளம்பரம்‌ செய்திருந்தனர்‌. 


இதைப்பார்த்த ராம்ராஜ் நிறுவனத்தினர்‌ சென்னை மத்திய குற்றப்பிரிவு போலிசில்‌ புகார்‌ செய்தனர்‌. அதன்‌ பேரில்‌ போலீசார்‌ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்‌. அப்போது சென்னை பூந்தமல்லி பகுதியைச்‌ சேர்ந்த ஆண்ட்ரியா டிஸைன்ஸ்‌ மற்றும்‌ ஆர்‌ கிளாத்ஸ்‌ லிமிடெட்‌ என்ற நிறுவனத்தின்‌ உரிமையாளர்களுமான டி.கருணாநிதி, அவரது மனைவி கே.அன்பரசி ஆகியோர் இணைந்து ராம்ராஜ்‌ காட்டன்‌ முத்திரையைப்‌ பயன்படுத்தி போலி முகக்கவசங்கள்‌ தயாரித்து விற்பனை செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது..

சென்னை மாநகர காவல்‌துறை கமிஷனர் சங்கர்ஜிவால்‌ வழிகாட்டுதலின்படி, சென்னை மத்திய குற்றப்பிரிவு இணை ஆணையர்‌ தேன்மொழி உத்தரவின்‌ பேரில்‌ துணை ஆணையாளர்‌ பாலசுப்பிரமணியம்‌ மேற்பார்வையில்‌, சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர்‌ கந்தகுமார்‌ தலைமையில்‌ மேற்கண்ட நிறுவனங்களில்‌ சோதனை நடத்தி அங்கு பதுக்கிவைக்கபட்டிருந்த போலி முகக்கவசங்களையும்‌, அதற்கு பயன்படுத்திய இயந்திரங்களையும்‌ போலீசார் பறிமுதல்‌ செய்தனர்‌. இதைத் தொடர்ந்து அந்த நிறுவன உரிமையாளர்‌ டி.கருணாநிதியை கைது செய்து சிறையில்‌ அடைத்தனர்‌.

 

Tags :

Share via