தி.மு.க. அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்து வெளிநடப்பு - எடப்பாடி பழனிசாமி

by Admin / 13-08-2021 02:39:51pm
தி.மு.க. அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்து வெளிநடப்பு - எடப்பாடி பழனிசாமி

 

 பத்திரிகை சுதந்திரம் பற்றி மூச்சுக்கு முன்னூறு தடவை பேசும் மு.க.ஸ்டாலின் ‘நமது அம்மா’ நாளிதழ் அலுவலகத்திலும் சோதனை நடத்தியது கண்டிக்கத்தக்கது என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

தமிழக சட்டசபையில் இன்று பட்ஜெட் உரையை புறக்கணித்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின்போது 505-க்கும் மேற்பட்ட நடைமுறைப்படுத்த முடியாத வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக கூறி தி.மு.க. ஆட்சிக்கு வந்துள்ளது.

தேர்தல் நேரத்தின் போது ஆட்சி பொறுப்பேற்றவுடன் நீட் தேர்வை ரத்து செய்து முதல் கையெழுத்தை போடுவேன் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் ஆகியும் இதற்கு எந்த தீர்வும் எட்டப்படவில்லை. மேலும் நீட் தேர்வு விலக்கு கிடைக்கும் வரை மாணவர்கள் நீட் தேர்வுக்கு நன்கு படித்து தயாராக வேண்டும் என்று கூறி தெளிவான அறிவிப்பை வெளியிடாமல் மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தினார்கள். இதனை கண்டித்து வெளிநடப்பு செய்தோம்.

வெள்ளை அறிக்கை என்ற பெயரில் வெற்று அறிக்கையை வெளியிட்டுள்ளனர். 14-வது நிதிக்குழு மதிப்பீட்டின் அடிப்படையில் வரி வருவாயில் 75 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு என்றும், திட்ட நிதியில் ரூ.25 ஆயிரம் கோடி முறையாக செலவிடப்படவில்லை என்றும் தவறான அறிக்கையை நிதி அமைச்சர் வெளியிட்டுள்ளார். வெள்ளை அறிக்கை என்பது தி.மு.க. விளம்பரம் தேட எடுத்த முயற்சிதான்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வெற்றி அடைந்த முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்கள், நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போடுவதை வன்மையாக கண்டிக்கிறோம்.

உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் நேரத்தில், கழக தொண்டர்களின் வேகத்துக்கு தடைபோட்டு விடலாம் என்று தி.மு.க. பகல் கனவு காண வேண்டாம். பொய் வழக்குகளுக்கு அஞ்ச மாட்டோம். சட்டப்படி எதிர்கொள்வோம். எனவே உண்மைக்கு புறம்பாக பொய் வழக்கு போடும் தி.மு.க. அரசை கண்டிக்கிறோம்.

வெளிநடப்பு செய்த அதிமுகவினர்

பத்திரிகை சுதந்திரம் பற்றி மூச்சுக்கு முன்னூறு தடவை பேசும் மு.க.ஸ்டாலின் ‘நமது அம்மா’ நாளிதழ் அலுவலகத்திலும் சோதனை நடத்தியது கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.

கேள்வி:- சட்ட பேரவை கூட்டத்தொடர் முழுவதும் வெளிநடப்பு செய்வீர்களா? கடந்த ஆட்சியில் தி.மு.க. வெளிநடப்பு செய்ததை குறை கூறினீர்களே?

பதில்:- அந்தந்த நேரத்தில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு ஏற்பதான் இதில் முடிவு எடுக்க முடியும். தி.மு.க. அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்துதான் இப்போது வெளிநடப்பு செய்திருக்கிறோம். நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று சொன்னது. ஆட்சி அமைத்து 100 நாட்கள் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கேள்வி:- வெள்ளை அறிக்கை பற்றி உரிய நேரத்தில் விளக்கம் அளிக்கப்படும் என்று முன்னாள் நிதி அமைச்சர் ஓ.பி.எஸ். கூறி இருந்தாரே எப்போது பதில் அளிக்கப்படும்?

பதில்:- இதற்கு சட்டப்பேரவையிலும் நேரம் வரும்போது உரிய பதில் அளிப்போம். (அப்போத குறுக்கிட்டு பேசிய ஓ.பன்னீர்செல்வம் சட்டசபையில் எனக்கு வாய்ப்பளிக்கும் போது வெள்ளை அறிக்கை பற்றி விரிவாக பதில் அளிப்பேன் என்றார்)

கேள்வி:- தி.மு.க.வின் 100 நாள் ஆட்சியை எப்படி பார்க்கிறீர்கள்?

எடப்பாடி பழனிசாமி:- வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளனர். இப்போது தான் பட்ஜெட் தாக்கல் செய்து இருக்கிறார்கள்.

நாங்கள் கொண்டு வந்த திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி உள்ளனர். எங்கள் திட்டங்களை செயல்படுத்தி உள்ளனர். மற்றபடி எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை.

கேள்வி:- முன்னாள் அமைச்சர்களிடம் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தப்பட்டுள்ளதே?

பதில்:- முதலில் முன்னாள் போக்குவரத்துதுறை அமைச்சர் வீட்டிலும், பிறகு முன்னாள் உள்ளாட்சி துறை அமைச்சர் வீட்டிலும் சோதனை நடத்தி உள்ளனர். இது அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் நடத்தப்பட்ட சோதனை. உள்ளாட்சி துறை அமைச்சர் பதவியில் இருந்த காலத்தில் 148 விருதுகளை வாங்கியுள்ளார்.

சிறந்த உள்ளாட்சி அமைச்சர் என்கிற பெயரையும் எடுத்தவர். ஒரு லட்சத்து இரண்டாயிரம் கிலோ மீட்டர் நீள கிராம சாலைகளை அமைத்துள்ளார். புதிதாக 50 ஆயிரம் கிராம சாலைகள் அமைக்கப்பட்டன. ஏராளமான கூட்டுக்குடி நீர் திட்டங்கள் உருவாக்கப்பட்டன.

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளிலும் 100 சதவீதம் அ.தி.மு.க.வுக்கு வெற்றி தேடி தந்தவர். இதையெல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாமல்தான் சோதனை நடத்தி உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags :

Share via