நாளை மறுநாள் சுதந்திரதின விழா: எழும்பூர்- சென்ட்ரல் ரெயில் நிலையங்களில் போலீஸ் கண்காணிப்பு

by Admin / 13-08-2021 03:50:27pm
நாளை மறுநாள் சுதந்திரதின விழா: எழும்பூர்- சென்ட்ரல் ரெயில் நிலையங்களில் போலீஸ் கண்காணிப்பு

 

சுதந்திரதின விழா நடைபெறும் தினமான நாளை மறுநாள் காமராஜர் சாலை, ராஜாஜி சாலை போன்ற பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தப்படுகிறது.

நாடு முழுவதும் நாளை மறுநாள் (15-ந் தேதி) 75-வது சுதந்திரதின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

சென்னையில் நாளை மறுநாள் தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடியை ஏற்றி வைக்கிறார். கொரோனா பரவலை கருத்தில் கொண்டு கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ள போதிலும் கோட்டை பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

சுதந்திரதின விழா நடைபெறும் தினமான நாளை மறுநாள் காமராஜர் சாலை, ராஜாஜி சாலை போன்ற பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தப்படுகிறது.

மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்ட்ரல்- எழும்பூர் ரெயில் நிலையங்களில் வழக்கத்தை விட பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. அங்கு 24 மணிநேரமும் சுழற்சி முறையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். உள்ளூர் போலீசாருடன் ரெயில்வே பாதுகாப்பு படையினரும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சென்ட்ரல்- எழும்பூர் ஆகிய 2 ரெயில் நிலையங்களிலும் நுழைவு வாயில்களில் பயணிகளின் உடமைகள் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. தண்டவாள பகுதிகளில் சந்தேக நபர்கள் நடமாடுகிறார்களா? என்பதை ரெயில்வே பாதுகாப்பு படையினர் கண்காணித்து வருகிறார்கள்.

120 ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் சுழற்சி முறையில் கண்காணித்து வருகிறார்கள். 8 மணி நேரத்திற்கு ஒருமுறை ஷிப்ட் மாற்றப்பட்டு ஒவ்வொரு ஷிப்டிலும் 40 காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

ரெயில்களில் கொண்டு செல்லப்படும் பயணிகளின் உடமைகள் பலத்த சோதனைக்கு உட்படுத்தப்படும் நிலையில் ரெயில்களில் அனுப்பப்படும் பார்சல்கள் அனைத்தையும் தவறாமல் பரிசோதிக்க வேண்டும் என்று ரெயில்வே போலீசாருக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ரெயில்வே போலீசார், மோப்ப நாய் உதவியுடன் இரண்டு ரெயில் நிலையங்களிலும் உள்ள பார்சல் பகுதிகளில் மெட்டல் டிடெக்டர் கருவியுடன் சோதனை நடத்தி வருகிறார்கள்.

இதேபோன்று தமிழகம் முழுவதும் அனைத்து ரெயில் நிலையங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

கோயம்பேடு பஸ் நிலையத்திலும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக பஸ் நிலையம் முழுவதும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த கண்காணிப்பின் போது சந்தேகத்திற்கு இடமாக யாராவது சுற்றித்திரிந்தால் அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவில்களில் இன்று முதல் 3 நாட்கள் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும் அங்கும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய கோவில்கள் மற்றும் சென்னையில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்கள் ஆகியவற்றில் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.

சுதந்திர தினத்தையொட்டி இன்று முதல் 15-ந் தேதி வரையில் வாகன சோதனையை தீவிரப்படுத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

 

Tags :

Share via