காபூல் விமானநிலையத்தில் குண்டுவெடிப்பு: குழந்தைகள் உட்பட 90 பேர் பலி

by Admin / 27-08-2021 03:23:41pm
காபூல் விமானநிலையத்தில் குண்டுவெடிப்பு: குழந்தைகள் உட்பட 90 பேர் பலி

காபூல் விமான நிலையத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் சுமார் 90 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை தொடா்ந்து, அந்நாட்டிலிருந்து தங்கள் நாட்டு மக்களை வெளியேற்ற அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன. ஆப்கன் குடிமக்களும் தாலிபான்களுக்கு அஞ்சி சொந்த நாட்டிலிருந்தே வெளியேறி வருகின்றனர்.

இதனால் தலைநகர் காபூலில் உள்ள சா்வதேச விமான நிலையத்தில் தினமும் ஆயிரக்கணக்கானோா் குவிந்து வருகின்றனா். இந்நிலையில், விமான நிலையத்திற்கு வெளியே நேற்று இரவு அடுத்தடுத்து குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. பிரதான அபே கேட்டில் நிகழ்ந்த ஒரு குண்டு வெடிப்பில், ஏராளமானோர் தூக்கி வீசப்பட்டனர்.
 
இந்த தாக்குதலில் சுமார் 90 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவா்களில் 12 பேர், காபூல் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க படைவீரர்கள் ஆவர். குழந்தைகள் உள்பட பலர் காயமடைந்து, பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த காபூல் விமான நிலைய குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு, ஐ.எஸ்.ஐ.எஸ். காரோஷன் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்புக்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. எனவே இந்த தாக்குதலுக்கு தலிபான் அமைப்பும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
 

 

Tags :

Share via