தொடர்ந்து சொதப்பல்: தெண்டுல்கரிடம் கோலி ஆலோசனை பெற வேண்டும்- கவாஸ்கர் யோசனை

by Admin / 27-08-2021 04:56:23pm
தொடர்ந்து சொதப்பல்: தெண்டுல்கரிடம் கோலி ஆலோசனை பெற வேண்டும்- கவாஸ்கர் யோசனை

இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஃபார்ம் இழந்து ரன்கள் குவிக்க தவித்து வருவது அணிக்கு மிகப்பெரிய பாதகமாக இருந்து வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி சமீப காலமாக பேட்டிங்கில் தொடர்ந்து ஏமாற்றம் அளித்து வருகிறார். அவர் கடைசியாக விளையாடிய 50 இன்னிங்சில் சதம்கூட அடிக்கவில்லை.

தற்போது நடந்துவரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் பெரிய அளவில் சோபிக்கவில்லை. மேலும் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் பந்து வீச்சில் திணறி வருகிறார். இதனால் விராட் கோலி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார்.

இந்த நிலையில் தெண்டுல்கரிடம் கோலி ஆலோசனை பெற வேண்டும் என்று இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
இங்கிலாந்துக்கு எதிராக குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன்னுக்கு எதிராக விராட் கோலி திணறி வருவதால், இப்பிரச்சினையை தீர்க்க அவர் சச்சின் தெண்டுல்கரை தொடர்பு கொள்ள வேண்டும். தெண்டுல்கரிடம் நான் என்ன செய்ய வேண்டும்? என்று விராட் கோலி கேட்க வேண்டும். அவரிடம் ஆலோசனைகளை கேட்டு பெற வேண்டும்.

விராட் கோலியின் பேட்டிங் எனக்கு கொஞ்சம் கவலை அளிக்கிறது. ஏனென்றால் அவர் ஸ்டெம்புக்கு வெளியே செல்லும் பந்துகளில் அவுட் ஆகிறார். 2014-ம் ஆண்டிலும் இதே போன்று ஸ்டெம்புக்கு வெளியே சென்ற பந்துகளில் அதிகமுறை அவுட் ஆகி இருந்தார்.

2003-04-ம் ஆண்டில் சிட்னி டெஸ்டில் தெண்டுல்கர் செயல்படுத்திய முறைகளை கோலி பின்பற்ற வேண்டும். அந்த டெஸ்டில் கவர் டிரைவ் ஷாட்டை விளையாடப் போவதில்லை என்று தெண்டுல்கர் தனக்குத்தானே சொல்லிக் கொண்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தெண்டுல்கர் ஸ்டெம்புக்கு வெளியே சென்ற பந்துகளை அடிக்காமல் விட்டுவிட்டார். இதன் மூலம் அவர் அந்த தொடரில் இரட்டை சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

 

Tags :

Share via