தலிபான்களை பாராட்டிய அமெரிக்கா... படைகள் வெளியேற உதவியதாக தகவல்...

by Admin / 31-08-2021 04:18:04pm
தலிபான்களை பாராட்டிய அமெரிக்கா... படைகள் வெளியேற உதவியதாக தகவல்...



ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருந்த அமெரிக்கப் படைகள் 20 வருடங்களுக்கு பிறகு அந்நாட்டிலிருந்து முழுமையாக வெளியேறின.

 அமெரிக்காவில் கடந்த 2001ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட இரட்டை கோபுரத் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதி ஒசாமா பின்லேடனுக்கு ஆதரவு அளித்ததற்கான தாலிபான்கள் மீது அமெரிக்கா போர் தொடுத்தது.

இதன் பின்னர் 20 ஆண்டுகள் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானில் முகாமிட்டு தாலிபான்கள் மீது தாக்குதல் நடத்தி வந்தன. இந்நிலையில் அமைதிப்பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் ஆப்கானிஸ்தானில் இருந்து இன்றைக்குள் முழுப் படைகளையும் வாபஸ் பெறுவதாக அமெரிக்கா அறிவித்திருந்தது.

அதன்படி அந்நாட்டில் முகாமிட்டிருந்த கடைசி ராணுவக் குழுவும் வெளியேறிவிட்டதாக அமெரிக்க அறிவித்துள்ளது. மேலும் அங்கிருந்து பொதுமக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
 
ஆகஸ்ட் 30ம் தேதி மாலை மூன்றரை மணிக்கு முன்னதாக கடைசி  சி17 ராணுவ சரக்கு விமானமும் ஆப்கானிஸ்தானில் இருந்து புறப்பட்டு விட்டதாக அமெரிக்காவின் மத்திய ராணுவ காமண்டர் ஜெனரல் கென்னத் மெக்கென்சி தெரிவித்துள்ளார்.

மேலும் மோதல்களுக்கு இடையேயும், படைகள் வெளியேற தலிபான்கள் அனைத்து விதமான உதவிகளையும் செய்ததாக அவர் பாராட்டு தெரிவித்தார். கடந்த 17 நாட்களில் மட்டும் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேறியதால் விமான நிலையத்துக்குள் நுழைந்த தலிபான்கள் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

 

Tags :

Share via