ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் ஓபிஎஸ் சந்திப்பு

by Editor / 18-09-2021 11:54:41am
ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் ஓபிஎஸ் சந்திப்பு

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மறைவுக்கு துக்கம் விசாரிப்பதற்காக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் பெரியகுளம் வந்தார். விஜயலட்சுமியின் படத்திற்கு அஞ்சலி செலுத்தியவர். ஓபிஎஸ்க்கு ஆறுதல் கூறிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

ஜெயலலிதாவின் உதவியாளராக இருபது ஆண்டுகளுக்கு மேல் இருந்தவர் பூங்குன்றன். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அரசியல் தொடர்புகளில் இருந்து தன்னைத் துண்டித்துக்கொண்ட பூங்குன்றன் தற்போது தஞ்சையில் வசித்தபடி விவசாயம் செய்யும் இவர், கோயில்களுக்கு சென்று திருப்பணிகளையும் அவ்வப்போது செய்துவருகிறார்.

ஜெயலலிதாவின் பெரும் நம்பிக்கையைப் பெற்ற பூங்குன்றன் அவர் இருந்த காலத்தில் நிழல் போல் பரபரப்பாக காணப்பட்டார். ஜெயலலிதா, அதிமுகவின் பல்வேறு சொத்துக்களை பூங்குன்றனின் பெயரில் தான் வாங்கினார். அதிமுகவின் சொத்துக்களை பராமரிக்கும் நிர்வாகியாகவும் பூங்குன்றனை தான் ஜெயலலிதா நியமித்தார். ஜெயலலிதா உயிருடன் இருந்த காலத்தில் எப்போதும் பரபரப்பாகவே காணப்பட்ட பூங்குன்றன், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அரசியலிலிருந்தும், ஆட்சியாளர்களிடம் இருந்தும் முற்றாக ஒதுங்கிக் கொண்டார்.இந்நிலையில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டாக உடைந்த போது அமைதியாக இருந்தவர், கடந்த ஜனவரியில் சசிகலா விடுதலையான சமயத்தில் தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை கண்டு கொதித்து போனார். சசிகலாவின் கட்டுப்பாட்டில் சென்று எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வத்திற்கு எதிராக திரும்புவார் என்றெல்லாம் அப்போது காட்டுத்தீ போல் வதந்திகள் பரவின. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கடந்த ஜனவரி மாதம் பேஸ்புக்கில் பதிவு ஒன்றும் பூங்குன்றன் வெளியிட்டார்.அந்த பதிவில், என்னை விமர்சனம் செய்பவர்களுக்கு என் விசுவாசம் பற்றித் தெரிய வாய்ப்பில்லை. இந்த ஆட்சி அம்மாவின் ஆட்சி. இதில் உரிமை கொண்டாடுவதில் யாருக்கும் பெருமையுமில்லை. அம்மா அவர்கள் கஷ்டப்பட்டு பெற்று தந்த ஆட்சிக்கு என்னால் ஒரு களங்கம் வரக்கூடாது என்பதால் மௌனம் காத்தேன். தை பிறந்து விட்டது. தேர்தலும் நெருங்கிவிட்டது. சிலரின் பேச்சும், விமர்சனங்களும் என் மனதை பெரிதும் பாதித்து வந்தன. அதற்காகவே இந்த மனக்குமுறல்.அம்மா அவர்கள் ஆசையோடு எனக்கு வாங்கித் தந்த காரை நிறுத்திவிட்டார்கள். ஏன் நிறுத்தினீர்கள் என்று இன்றுவரை கேட்டிருப்பேனா? கட்சியின் சொத்துக்களான அறக்கட்டளைகள் மூன்றிலும் அம்மா அவர்களின் மறைவுக்கு பிறகு நான் மட்டுமே நிர்வாகி. நான் என்றாவது இதைப் பற்றி பேசி இருப்பேனா? அதை மாற்றிக் கொடுத்தால் உங்கள் உயிருக்கு ஆபத்து என்றுச் சொன்னார்கள். இதைப் பற்றி என்றாவது வெளியில் சொல்லி இருப்பேனா? அறக்கட்டளை என்னுடையது என்று சொந்தம் கொண்டாடினேனா?தொண்டர்களின் உணர்வுகளைப் பதிவிடும் போது தலைவர்கள் கோபமாக இருக்கிறார்கள். எதாவது செய்து விடப் போகிறார்கள். வெளியில் செல்லும் போது கவனமாக செல்லுங்கள் என்றார்கள். இதுபற்றி நான் யாரிடமாவது விவாதித்தது உண்டா? தொலைக்காட்சியிலும், பத்திரிக்கையிலும் நீண்ட நாட்களாகப் பேட்டி கேட்டு வருகிறார்கள். என் பேட்டி கட்சிக்கோ, மற்றவர்களுக்கோ எந்த விதத்திலும் சங்கடத்தை தந்துவிடக்கூடாது என்பதற்காகவே தவிர்த்து வருகிறேன்.

எல்லாவற்றையும் அவன் பெயரில் மாற்றுங்கள். அவன் ஒருவனே என் நம்பிக்கைக்குரியவன் என்று அம்மா அவர்கள் சொன்னதை இதுவரை பெருமையாக சொல்லி இருப்பேனா? போயஸ் கார்டன் வீட்டின் சொத்துவரிக்கான படிவத்தில் அம்மா அவர்களுக்கான இடத்தில் என்னை கையெழுத்திட சொன்ன நம்பிக்கை பெற்றவன் நான். அதுவே என் ஆனந்தம். அதுவே என் வெற்றி. அதுவே எனக்குப் போதும். மூன்று முறை கழக உறுப்பினர் உரிமை சீட்டிற்கு விண்ணப்பித்த போது என்னுடைய படிவத்தை மட்டும் வாங்க மறுத்தீர்களே, அதைத் தட்டிக் கேட்டேனா? மற்றவர்களுக்கு தெரிவித்தேனா?உங்களுக்கு தராமல் என் பெயரில் கட்சியின் அறக்கட்டளைகளை அம்மா தந்திருப்பதால் நான் தான் அம்மாவின் வாரிசு என்று அறிவித்தேனா? யாருக்கும் என்னால் எந்த சங்கடமும் வரக்கூடாது என்பதற்காக கோயில் கோயிலாக அலைந்து கொண்டிருக்கும் என்னை பார்த்து ஏளனம் பேச உங்களுக்கு எப்படி மனம் வருகிறது. ஏதோ ஒரு வகையில் என்னிடம் உதவி பெற்றிருப்பீர்கள். நமக்கு உதவியவன் இவன் என்று என்றாவது அழைத்து ஆறுதல் சொல்லி இருப்பீர்களா? இன்னுமா புரியவில்லை என் விசுவாசம். இதற்குமேல் எப்படி கழகத்திற்கு விசுவாசமாக செயல்படுவது என்று எனக்கும் புரியவில்லை. சொல்லித்தாருங்கள்.அம்மாவே இல்லை என்று ஆன பிறகு சொத்துக்கள் எதற்கு? சொத்திலும் ஆசை இல்லை. கட்சியிலும் ஆசை இல்லை. தலைமையில் இருப்பவர் கட்சியை வலிமையாக நடத்த வேண்டும். அதுவே என் ஆசை, வேண்டுதல். தலைவராக யாரையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் எனக்கு உண்டு. நீங்கள் நலமாக இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டு, யாரிடமும் செல்லாமல் இன்று நிற்கதியாய் நிற்கும் என்னை நிம்மதியாக வாழவிடுங்கள்" என்று பூங்குன்றன் பதிவிட்டிருந்தார்.இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மறைவுக்கு துக்கம் விசாரிப்பதற்காக தேனி மாவட்டம் பெரியகுளத்திற்கு பூங்குன்றன் வந்தார். விஜயலட்சுமியின் படத்திற்கு அஞ்சலி செலுத்திவிட்டு, ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆறுதல் கூறினார். சிறிது நேரம் பேசிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

 

Tags :

Share via