270 பேருக்கு தலா ரூ.10,000 வீதம் ரூ.27 லட்சம்செ வழங்கிய செந்தில் பாலாஜி.

by Editor / 18-09-2021 11:57:52am
270 பேருக்கு தலா ரூ.10,000 வீதம் ரூ.27 லட்சம்செ வழங்கிய செந்தில் பாலாஜி.

கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் 270 மூத்த கட்சிக்காரர்களுக்கு, தலா ரூ.10,000 வீதம் ரூ.27 லட்சம் ரூபாய் பொற்கிழி வழங்கி முதலமைச்சரின் ஸ்டாலினின் நன்மதிப்பை பெற்றிருக்கிறார் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி.

எந்தக் காரியம் செய்தாலும் அதில் ஒரு பிரம்மாண்டம் இருக்க வேண்டும் என விரும்பும் அமைச்சர் செந்தில்பாலாஜி, வழக்கம் போல் திமுக முப்பெரும் விழாவிலும் தனது பிரம்மாண்டத்தை காட்டிவிட்டார்.

குளிரூட்டப்பட்ட திருமண மஹாலில் சமூக இடைவெளியுடன் இருக்கைகள் அமைத்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை காணொலி மூலம் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பங்கேற்க வைத்திருக்கிறார்.தமிழ் சினிமாவை பொறுத்தவரை இயக்குநர் ஷங்கர் படம் என்றால் அதில் பிரம்மாண்டங்கள் நிறைந்திருக்கும். காண்போர் கண் குளிரும் வகையிலும், புருவம் உயர்த்தும் வகையிலும் படக்காட்சிகள் அமைந்திருக்கும். இதேபோல் தமிழக அரசியல் களத்திலும் ஒரு சிலர் தாங்கள் நடத்தும் எந்தவொரு அரசியல் நிகழ்ச்சியாக இருந்தாலும் அதில் பிரம்மாண்டத்தை பதிவு செய்து விடுவார்கள்.அந்த வரிசையில் பிரதான இடத்தில் உள்ள மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, கரூர் மாவட்டத்தில் நடத்தும் கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் பிரமிக்க வைப்பதாகவே இருக்கும். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் காணொளி மூலம் கரூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கலந்துகொள்ள வைத்து அதில் மூத்த கட்சிக்காரர்கள் 270 பேருக்கு தலா ரூ.10,000 வீதம் ரூ.27 லட்சம் ரூபாய் பொற்கிழி வழங்கியுள்ளார்.திமுக சீனியர்கள் மாவட்டச் செயலாளர்களாக இருக்கும் மாவட்டங்களில் கூட இது போன்ற ஒரு ஏற்பாடு நடைபெற்றதாக தெரியவில்லை. மு.க.ஸ்டாலின் கரூருக்கு வந்திருந்தால் என்ன ஏற்பாடு செய்யப்பட்டிருக்குமோ அதே போன்ற ஒரு ஏற்பாட்டை காணொலி மூலம் நடைபெற்ற முப்பெரும் விழாவுக்கும் செந்தில்பாலாஜி டீம் செய்திருந்தது. கடந்த காலங்களில் எதிரும் புதிருமாக அரசியல் செய்து வந்த முன்னாள் கரூர் எம்.பி. கே.சி.பழனிசாமியும், செந்தில்பாலாஜியும் ஒரே மேசையில் அமர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.முப்பெரும் விழா காட்சிகளை மாவட்டம் வாரியாக அண்ணா அறிவாலயத்தின் மேடையில் அமர்ந்தவாறே நோட்டமிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கரூரில் செந்தில்பாலாஜி நடத்திய நிகழ்ச்சியை திரையில் கண்டும், அவர் பொற்கிழி கொடுத்ததை அறிந்தும் பாராட்டியிருக்கிறார்.

 

Tags :

Share via