அடுத்த மாதத்துக்குள் அனைவருக்கும்  முதல் டோஸ் தடுப்பூசி செலுத்த இலக்கு சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் 

by Editor / 20-09-2021 05:25:14pm
 அடுத்த மாதத்துக்குள் அனைவருக்கும்  முதல் டோஸ் தடுப்பூசி செலுத்த இலக்கு சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் 


தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் அக்டோபர் மாதத்துக்குள் முதல் தவணை தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில்  2-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அப்போது மருத்துவமனை டீன் டாக்டர் தேரணிராஜன் உடனிருந்தார்.


ஆய்வுக்கு பிறகு ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் செப்டம்பர் 1-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை 91.26 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. ஜனவரியில் 1.5 லட்சம், பிப்ரவரியில் 3.50 லட்சம், மார்ச் மாதம் 25.73 லட்சம், ஏப்ரல் 28.22 லட்சம், மே 30 லட்சம், ஜூன் 57 லட்சம், ஜூலை 67 லட்சம், ஆகஸ்டில் 91 லட்சம் என தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. மாநிலத்தில் மொத்தமாக 4.2 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 3.20 கோடி பேர் முதல் தவணை தடுப்பூசிகளும், 94 லட்சம் பேர் 2-வது தவணை தடுப்பூசிகளும் செலுத்தி உள்ளனர்.
முதல் தவணை தடுப்பூசியை பொறுத்தவரை அதிகபட்சமாக கோவையில் 75 சதவீதமும், காஞ்சீபுரத்தில் 73 சதவீதமும், திருப்பூரில் 67 சதவீதமும், சென்னையில் 65 சதவீதமும் செலுத்தப்பட்டுள்ளன.


2-வது தவணை தடுப்பூசி சென்னையில் 32 சதவீதமும், நீலகிரியில் 29 சதவீதமும், கோவையில் 25 சதவீதமும், பூந்தமல்லியில் 23 சதவீதமும் செலுத்தப்பட்டுள்ளன. தூத்துக்குடி, கடலூர், நெல்லை, திருப்பத்தூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் முதல் தவணை தடுப்பூசியை 40 சதவீதம் பேர் மட்டுமே போட்டுள்ளனர். இந்த மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.


3-வது அலை முன்னெச்சரிக்கையாக தமிழகத்தில் 222 இடங்களில் ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள் நிறுவுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் 172 ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள் நிறுவும் பணி முடிவடைந்துள்ளது. 17 ஆயிரத்து 940 ஆக்சிஜன் செறிவூட்டிகள் தயார்நிலையில் உள்ளன. தஞ்சை, கோவை, திருப்பூர், ஈரோடு, சென்னையில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்துள்ளது.


2-வது தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ளும் காலக்கெடு முடிந்து, தடுப்பூசி போடாமல் இருக்கும் 18 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அடுத்த 6 வாரம் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதன் மூலம் நோயை முழுமையாகத் தடுக்க முடியும். அக்டோபர் மாதத்துக்குள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags :

Share via