பா.ம.க.வுக்கு எதிரான நோட்டீசை  ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு

by Editor / 27-09-2021 04:04:31pm
பா.ம.க.வுக்கு எதிரான நோட்டீசை  ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு


மரக்காணம் கலவரத்தில் பொது சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேததிற்கான இழப்பீட்டை வசூலிப்பது குறித்த விசாரணைக்கு ஆஜராகும்படி பா.ம.க.வுக்கு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்ய மறுத்த சென்னை ஐகோர்ட் நீதிபதி, பொது சொத்துக்களை சேதப்படுத்தும் அரசியல் கட்சிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.


மாமல்லபுரத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் சித்திரை திருவிழா நடத்தப்பட்டது. அப்போது, மரக்காணம் அருகே கட்டையன் தெரு காலனி பேருந்து நிறுத்தத்தில் கலவரம் ஏற்பட்டு, அரசியல் தலைவர்கள் சிலைகள் சேதப்படுத்தப்பட்டன. இந்த கலவரத்தின் போது பா.ம.க.வினர் கைது செய்யப்பட்டனர். இதைக் கண்டித்து 2013ம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி கிருஷ்ணகிரியில் நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.இதனால், 2013 ஏப்ரல் 25ம் தேதி முதல் மே 19ம் தேதி வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பொது போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் போக்குவரத்து கழகத்திற்கு ஏற்பட்ட இழப்பை வசூலிப்பது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி, பா.ம.க. தலைவர் ஜி.கே.மணிக்கு வருவாய் நிர்வாக ஆணையர் நோட்டீஸ் அனுப்பினார்.


இந்த நோட்டீசை ரத்து செய்யக் கோரி பாமக சார்பில் அக்கட்சியின் தலைவர் ஜிகே மணி வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், கலவரம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளில், பா.ம.க.வினர் விடுதலை செய்யப்பட்டதாகவும், அரசு அனுப்பிய நோட்டீசில், போக்குவரத்து இயங்காததால் ஏற்பட்ட இழப்பை வசூல் செய்வது தொடர்பாக, அரசியல் உள்நோக்கத்துடன் நோட்டீஸ் அனுப்பட்டுள்ளாதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. போக்குவரத்து துறை தரப்பில், மொத்தம், 58 பேருந்துகள் சேதம் அடைந்ததாகவும், பல கோடிகள் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.


இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், தமிழ்நாடு பொது சொத்து சேதம் விளைவித்தல் தடுப்புச் சட்டப்படி, பொது சொத்துக்களை சேதம் ஏற்படுத்தினால் மட்டுமில்லாமல், நிதி இழப்பு ஏற்படுத்தினாலும், சம்பந்தப்பட்டவர்களிடம் இழப்பீடு வசூலிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


தமிழ்நாடு பொது சொத்துக்கள் சேதம் விளைவித்தல் தடுப்புச் சட்டம், 1992ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட போதும், கடந்த 29 ஆண்டுகளாக இந்த சட்டம் திறமையாக அமல்படுத்தப்படவில்லை என்றும், இந்த சட்டத்தின் அடிப்படையில் எத்தனை பேரிடம் இழப்பீடுகள் வசூலிக்கப்பட்டது என்பது தெரியவில்லை என கூறிய நீதிபதி, இனி வரும் காலங்களில் இந்த சட்டத்தை கடுமையாக அமல்படுத்த வெண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், காவல் கண்காணிப்பாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வருவாய் நிர்வாக ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார். தவறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க எனவும் தமிழக அரசுக்கு நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.

 

Tags :

Share via