மக்களுக்கு பயன் அளிக்கக்கூடிய  வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம்

by Editor / 27-09-2021 04:07:54pm
மக்களுக்கு பயன் அளிக்கக்கூடிய  வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம்


மக்களுக்கு பயன் அளிக்கக் கூடிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
அண்ணா தி.மு.க. ஒருங்கி ணைப்பாளரும், முன்னாள் முதலமைச் சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-


4 மாதங்களுக்குள் 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றிக்காட்டியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமைப்பட்டுக்கொண்டுள்ளார் என்றாலும், தாங்கள் எந்த வாக்குறுதிகளை நம்பி வாக்களித்தோமோ, அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வில்லை என்பதுதான் தமிழ்நாடு மக்களின் ஆதங்கமாக தற்போது இருக்கிறது.


தி.மு.க. அளித்த முக்கியமான வாக்குறுதிகளில் ரூ.4 ஆயிரம் நிவாரணத்தொகை, உள்ளூர் பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் மற்றும் ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு ஆகிய வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டன. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.4-ம் குறைப்பு என்ற வாக்குறுதி 25 சதவீதம்தான் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் என்று அறிவித்துவிட்டு, அதற்கு வாய்ப்பே இல்லை என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருப்பதன் மூலம், அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாது என்று சூசகமாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அரசு ஊழியர்களுக்கு கொடுத்த வாக்குறுதியைத்தான் நிறைவேற்றவில்லை என்றாலும், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகவிலைப்படியை மத்திய அரசு அறிவித்தும், அதை தராமல் 6 மாதத்துக்கு தமிழக அரசு ஒத்திவைத்திருக்கிறது.


தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ‘நீட்’ தேர்வு ரத்து என்று மேடைக்கு மேடை முழங்கிவிட்டு, தற்போது சட்டசபையில் தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டு அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுவிட்டதாக கூறுவது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது சாதனை என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதனால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை.


தேர்தல் நேரத்தில் தி.மு.க. அளித்த வாக்குறுதியான கல்விக்கடன் ரத்து என்பதை நம்பி பெருவாரியான மக்கள் வாக்களித்தார்கள். அந்த கடனுக்கான வட்டி அதிகரித்துக்கொண்டே செல்கிறதே தவிர, அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படுவதாக தெரியவில்லை.எனவே முதலமைச்சர், பெரும்பாலான மக்களுக்கு பயன் அளிக்கக்கூடிய வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via