கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிக்கு  ஆஸ்திரேலிய அரசு அங்கீகாரம் 

by Editor / 01-10-2021 05:05:39pm
 கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிக்கு  ஆஸ்திரேலிய அரசு அங்கீகாரம் 

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிக்கு ஆஸ்திரேலிய அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளது. கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திய இந்தியப் பயணிகள் ஆஸ்திரேலியாவுக்குள் தடையின்றி வரலாம் என்று ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலை - அஸ்ட்ராஜென்காவின் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்ட் தடுப்பூசியை சீரம் இந்தியா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த கோவிஷீல்டு தடுப்பூசிக்கு பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் அங்கீகாரம் அளிக்காமல் இருந்தது. பிரிட்டனில் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு சமீபத்தில் தான் அங்கீகாரம் அளித்தாலும், சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. இந்நிலையில், ஆஸ்திரேலியாவும் தற்போது கோவிஷீல்டு தடுப்பூசியை அங்கீகரித்துள்ளது.

அதேபோல், சீனாவின் சினோவேக்ஸ் தடுப்பூசிக்கும் ஆஸ்திரேலிய அரசு அனுமதி அளித்துள்ளது.இது தொடர்பாக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சர்வதேசப் பயணிகள் கோவிஷீல்டு, சினோவேக்ஸ் ஆகிய இரு தடுப்பூசிகளில் ஏதாவது ஒன்றை இரு டோஸ்கள் செலுத்தியிருந்தால், அவர்களுக்குத் தனிமைப்படுத்துதல் அவசியமில்லை. இதன் மூலம் சர்வதேச அளவில் பல்கலைக்கழகங்களில் பயிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் ஆஸ்திரேலியாவுக்குத் தடையின்றி வரலாம். முழுமையாகத் தடுப்பூசி செலுத்திய ஆஸ்திரேலிய மக்கள், நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் நிரந்தரக் குடியிருப்பாளர்கள் இனிமேல் ஹோட்டலில் தனிமைப்படுத்தாமல் வீடுகளில் மட்டும் ஒரு வாரம் தனிமைப்படுத்தினால் போதும்.தடுப்பூசி செலுத்திய ஆஸ்திரேலிய மக்களுக்காக வர்த்தக ரீதியான விமானப் போக்குவரத்தும் விரைவில் துவங்கும். விமானத்தில் பயணிக்கும் பயணிகள் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியை முழுமையாகச் செலுத்தி, தனிமைப்படுத்துதலை முடித்தபின் பயணிக்கலாம்.

தடுப்பூசி செலுத்தாத பயணிகள் 14 நாட்கள் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்படுவார்கள். கொரோனா பரிசோதனை விமான நிலையங்களில் தொடர்ந்து நடத்தப்படும். ஆர்டிபிசிஆர் பரிசோதனை மட்டுமல்லாமல் ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனையும் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags :

Share via