ராகுல் தலைமையிலான குழு இன்று லக்கிம்பூர் செல்கிறது- உ.பி. அரசு அனுமதி மறுப்பு

by Editor / 06-10-2021 10:15:41am
ராகுல் தலைமையிலான குழு இன்று லக்கிம்பூர் செல்கிறது- உ.பி. அரசு அனுமதி மறுப்பு

உ.பி.யில் காரை ஏற்றி படுகொலை செய்யப்பட்ட விவசாயிகள் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் குழு இன்று லக்கிம்பூர் செல்கிறது. ஆனால் ராகுல் தலைமையிலான காங்கிரஸ் குழுவுக்கு உத்தரப்பிரதேச மாநில போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.

மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடைபெறும் போராட்டம் தற்போது உத்தரப்பிரதேசத்தில் உக்கிரமடைந்துள்ளது. உ.பி.யின் லக்கிம்பூர் கேரியில்(லக்கிம்பூர் கெரி) விவசாயிகள் பாஜகவினருக்கு கறுப்பு கொடி காட்டும் போராட்டத்தை நடத்தினர்.

அப்போது அந்த கூட்டத்துக்குள் காரை வேகமாக ஓட்டி ஏற்றியதில் 3 விவசாயிகள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து நடந்த வன்முறையில் மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர்.விவசாயிகள் கூட்டத்துக்குள் காரை ஏற்றி கொலை செய்தது மத்திய அமைச்சர் அஜிஸ் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா என விவசாயிகள் குற்றம்சாட்டினர். இதனை அஜிஸ் மிஸ்ரா தரப்பு திட்டவட்டமாக மறுத்து வருகிறது. ஆனால் உ.பி. போலீசார் ஆஷிஸ் மிஸ்ரா மீது கொலை வழக்குப் பதிவு செய்துள்ளது. இதனையடுத்து மத்திய அமைச்சர் பதவியில் இருந்து அஜிஸ் மிஸ்ரா ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

இதனிடையே லக்கிம்பூர் செல்ல முயன்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டு தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளார். இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது. இது தொடர்பாக பிரியங்கா காந்தி வெளியிட்ட அறிக்கையில், தாம் கைது செய்யப்பட்டதாக செல்போனில்தான் தெரிவித்தனர். எப்.ஐ.ஆர். நகலை காண்பிக்கவில்லை என குற்றம்சாட்டி இருந்தார். இதேபோல் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், பெண்களை சூரியன் அஸ்தமனத்துக்கு பின்னரும் சூரியன் உதயத்துக்கு முன்னரும் கைது செய்யக் கூடாது. ஆனால் பிரியங்கா காந்தி அதிகாலை 4.30 மணிக்கு கைது செய்யப்பட்டுள்ளார். உ.பி.யில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போய்விட்டது என சாடியிருந்தார்.

ராகுல் தலைமையிலான குழு 

இந்நிலையில் லக்கிம்பூரில் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் குழு இன்று அங்கு செல்கிறது. இதற்காக உ.பி. அரசிடம் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அனுமதி கேட்டிருந்தார். ஆனால் உ.பி. அரசு, காங்கிரஸ் குழு லக்கிம்பூர் செல்வதற்கு அனுமதி மறுத்துள்ளது. அக்டோபர் 3-ந் தேதி வன்முறையைத் தொடர்ந்து அப்பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளதால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக உ.பி. போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via