வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் ரூ.15 உயர்வு

by Editor / 06-10-2021 10:24:35am
வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் ரூ.15 உயர்வு

வீட்டு உபயோக சமையல் கேஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் 15 ரூபாய் உயர்த்தியுள்ளன. விலை உயர்வை அடுத்து சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 915.50 ஆக விற்பனையாகிறது. சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 26 காசுகள் உயர்ந்து 100.49 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 34 காசுகள் உயர்ந்து 95.93 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா விலையின் ஏற்ற இறக்கத்தை அடிப்படையாக வைத்துத் தான் இந்தியாவில் பெட்ரோல், டீசல் மட்டுமல்லாமல் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி மாற்றி அமைத்து வருகின்றன. ஆனால் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மாதத்திற்கு இரு முறை மாற்றி அமைக்கப்படுகின்றன. சில நேரங்களில் 3 முறை கூட மாற்றி அமைக்கப்படுகின்றன.

அந்த வகையில் பிப்ரவரி மாதத்தில் 700 ரூபாய் அளவில் இருந்த சமையல் எரிவாயு விலை 25 ரூபாய், 50 ரூபாய் என உயர்ந்து 825 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.கடந்த ஜூலை மாதம் சிலிண்டரின் விலை 25.50 ரூபாய் உயர்த்தப்பட்டது. ஆகஸ்ட். செப்டம்பர் மாதங்களிலும் 25 ரூபாய் மூன்று முறை உயர்த்தப்பட்டு ரூ.900.50 பைசாவாக விற்பனையானது. இந்த நிலையில் இன்றைய தினம் ஒரு சிலிண்டருக்கு 15 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு சிலிண்டர் 915 ரூபாய் 50 பைசாவாக விற்பனையாகிறது.

வீட்டு உபயோக சிலிண்டர் விலை பிப்ரவரி மாதத்தில் 700 ரூபாய் ஆக இருந்தது. கடந்த 8 மாதத்தில் 215 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு சிலிண்டர் 915 ரூபாய் கொடுக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு வணிக ரீதியாகப் பயன்படுத்தப்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர் 36.50 ரூபாய் உயர்த்தப்பட்டது. இன்றைய தினம் வீட்டு உபயோகத்திற்குப் பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது.கேஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது சாமானிய மக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் பெட்ரோல் விலை 3 ரூபாய் குறைக்கப்பட்டதால், தமிழக மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதே போல சமையல் கேஸ் சிலிண்டர் விலை குறையும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இல்லத்தரசிகளின் கோரிக்கையாகும்.

கடந்த பத்து நாட்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை தினமும் 25 காசு முதல் 30 காசு வரையில் அதிகரித்து வருகிறது. தினசரி விலை உயர்த்தப்பட்டதால் பெட்ரோல் விலை மீண்டும் 100 ரூபாயை தாண்டியது. அரியலூர், கோவை, கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, நாகை, நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தேனி, திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி ஆகிய பெரும்பாலான நகரங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100க்கு மேல் விற்கப்பட்ட நிலையில் சென்னையிலும் நேற்று பெட்ரோல் விலை சதமடித்தது.

பெட்ரோல் விலை மீண்டும் ரூ.100க்கும் மேல் கொண்டு வந்து விட்டதால், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், டீசல் விலையும் தொடர்ந்து ஏற்றம் பெற்று வருவதால் அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்கு உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் 100.23 ரூபாய், டீசல் லிட்டர் 95.59 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 26 காசுகள் உயர்ந்து 100.49 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 34 காசுகள் உயர்ந்து 95.93 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் விலை மீண்டும் உயர்ந்து 100 ரூபாயை தாண்டி விற்பனையாவதால் வாகன ஓட்டிகள் கலக்கமடைந்துள்ளனர்.

 

Tags :

Share via