லாரி கவிழ்ந்து விபத்து-லாரி, அரிசி மூட்டைகள் எரிந்து நாசம்

by Editor / 12-10-2021 12:04:09pm
லாரி கவிழ்ந்து விபத்து-லாரி, அரிசி மூட்டைகள் எரிந்து நாசம்

ஒடிசாவில் இருந்து கேரள மாநிலத்திற்கு அரிசி பாரம் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி சென்றது. இந்த லாரியை கேரள மாநிலமான பாலக்காடு பகுதியில் வசித்து வரும் அனுப் என்பவர் ஓட்டி வந்தார். அவருடன் மாற்று டிரைவராக காங்கேயம் பகுதியை சேர்ந்த பழனி வந்துள்ளார். இதனையடுத்து லாரி தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் அருகில் வந்து கொண்டிருந்தது. அப்போது டிரைவர் தன் கட்டுப்பாட்டை இழந்ததால் லாரி தாறுமாறாக ஓடி சாலையின் சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. மேலும் அந்த லாரி நிற்காமல் எதிர்திசை சாலைக்கு சென்று கழிந்து விட்டது.

அதுமட்டுமின்றி லாரி திடீரென தீப்பற்றி எரிந்ததால் டிரைவர்கள் 2 பேரும் இடிபாடுகளில் சிக்கி தவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கித் தவித்த டிரைவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இந்த விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்புதுறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து லாரியில் பற்றிய தீயை அணைத்தனர்.

இவ்வாறு ஏற்பட்ட தீ விபத்தினால் லாரி மற்றும் அரிசி மூட்டைகள் எரிந்து நாசமானது. இதனைதொடர்ந்து மற்ற வாகனங்கள் தேசிய நெடுசாலையின் இருபுறமும் நின்றது. இதன் காரணமாக அந்த சாலையின் இருபுறமும் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்துக்கு பாதிக்கப்பட்டது. அதன்பின் காவல்துறையினர், தீயணைப்புத்துறை வீரர்கள் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். 

 

Tags :

Share via