வருகிற 8-ந்தேதி முதல் மதுரை ஐகோர்ட்டில் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் விவரம் வெளியீடு

by Editor / 05-11-2021 09:34:51pm
வருகிற 8-ந்தேதி முதல் மதுரை ஐகோர்ட்டில் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் விவரம் வெளியீடு

மதுரை ஐகோர்ட்டில் வருகிற 8-ந்தேதியில் இருந்து வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

பொதுநல வழக்குகள்

நீதிபதிகள் ராஜா, வேல்முருகன் ஆகியோர் கொண்ட முதல் பெஞ்ச், பொதுநல வழக்குகள் மற்றும் அனைத்து ரிட் மனுக்கள், 2018-ம் ஆண்டு முதல் தாக்கலாகி நிலுவையில் உள்ள ரிட் அப்பீல் மனுக்கள், கிரிமினல் அவமதிப்பு மற்றும் அவமதிப்பு நடவடிக்கை கோரும் அப்பீல் மனுக்கள் ஆகியவற்றை விசாரிக்கின்றனர்.

2-வது டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெயச்சந்திரன் ஆகியோர் ஆட்கொணர்வு மனுக்கள், அனைத்து கிரிமினல் அப்பீல் மனுக்கள் மற்றும் கிரிமினல் வழக்குகள் (பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் உள்பட) 2017-ம் ஆண்டு வரை தாக்கலான ரிட் அப்பீல் மனுக்கள், அனைத்து சிவில் அப்பீல் மனுக்களை விசாரிக்கின்றனர்.

வரி தொடர்பான மனுக்கள்

நீதிபதி எம்.சுந்தர், வரி தொடர்பான ரிட் மனுக்கள் (மோட்டார் வாகன வரி, ஏற்றுமதி-இறக்குமதி உள்பட), சுங்கம் மற்றும் மத்திய கலால் வரி, வனம், தொழில்துறை மற்றும் அறநிலையத்துறை தொடர்பான மனுக்களை விசாரிக்கிறார்.

நீதிபதி நிஷா பானு, 2006-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை தாக்கலாகி நிலுவையில் உள்ள 2-ம் நிலை அப்பீல் மனுக்களை விசாரிக்கிறார்.

நீதிபதி அனிதாசுமந்த், 2018, 2019-ம் ஆண்டுகளில் தாக்கலாகி நிலுவையில் உள்ள தொழிலாளர் மற்றும் பணியாளர் சம்பந்தப்பட்ட ரிட் மனுக்களை விசாரிக்கிறார்.

கனிம வழக்குகள்

நீதிபதி கார்த்திகேயன், பொது சிறு வழக்குகள், கனிமம் மற்றும் தாதுக்கள், நிலசீர்திருத்தம், நில குத்தகை, நகர நில வரையறை, நிலம் கையகப்படுத்துதல் மற்றும் நிலச்சட்டம் தொடர்பான ரிட் மனுக்கள், தகவல் பெறும் உரிமைச்சட்டம், சுதந்திரப்போராட்ட தியாகி பென்சன் திட்டம், இதர பெஞ்ச்களில் குறிப்பிடப்படாத வகை ரிட் மனுக்கள் ஆகியவற்றை விசாரிக்கிறார்.

நீதிபதி பவானிசுப்பராயன், 2011-ம் ஆண்டு முதல் தாக்கலாகி நிலுவையில் உள்ள 2-ம் நிலை அப்பீல் மனுக்களை விசாரிக்கிறார்.

இதேபோல குற்றவியல் நடைமுறைச்சட்டப்பிரிவுகள் 407, 482 ஆகிய பிரிவுகளின் கீழ் தாக்கலாகும் கிரிமினல் மனுக்கள், குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின்கீழ் கடந்த இந்த ஆண்டு தாக்கலான ரிட் மனுக்களை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரிக்கிறார்.

நீதிபதி தாரணி, கிரிமினல் அப்பீல் மனுக்கள் (பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்புடைய அப்பீல் மனுக்கள்), கிரிமினல் ரிவிசன் மனுக்களை விசாரிக்கிறார்.

நீதிபதி ஆஷா, சிவில் ரிவிஷன் மனுக்கள், இடமாற்ற சிவில் சிறு மனுக்கள் மற்றும் நிறுவனங்களின் அப்பீல் மனுக்களை விசாரிக்கிறார்.

சி.பி.ஐ., ஊழல் வழக்குகள்

நீதிபதி புகழேந்தி, கடந்த ஆண்டு முதல் தாக்கலான தொழிலாளர் மற்றும் பணியாளர் தொடர்பான ரிட் மனுக்களை விசாரிக்கிறார்.

நீதிபதி இளங்கோவன், சி.பி.ஐ., ஊழல் தடுப்புச்சட்டத்தின்கீழ் பதிவான வழக்குகள் (ஜாமீன், முன்ஜாமீன் மனுக்களை தவிர) குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவுகள் 407, 482 ஆகியவற்றின்கீழ் தாக்கலாகும் கிரிமினல் மனுக்கள், குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின்கீழ் 2019-ம் ஆண்டு வரை தாக்கலாகி நிலுவையில் உள்ள ரிட் மனுக்களை விசாரிக்கிறார்.

நீதிபதி ஆனந்தி, சிவில் சிறு வழக்குகளின் அப்பீல் மனுக்கள், சிவில் சிறு வழக்குகளின் 2-ம் நிலை அப்பீல் மனுக்கள் மற்றும் முதல் நிலை அப்பீல் மனுக்களை விசாரிக்கிறார்.

ஜாமீன், முன்ஜாமீன்

நீதிபதி முரளிசங்கர், முன்ஜாமீன், ஜாமீன் மனுக்கள், பல்வேறு ஜாமீன், முன்ஜாமீன் தொடர்பான வழக்குகளில் தளர்வு கோருதல், ரத்து செய்ய வேண்டுதல், மாற்றியமைக்கக்கோருதல் உள்ளிட்ட கிரிமினல் ஒரிஜினல் மனுக்கள், இதர வகை ஜாமீன், முன்ஜாமீன் மனுக்கள், குற்றவியல் நடைமுறைச்சட்டப்பிரிவுகள் 407, 482 ஆகியவற்றின்கீழ் தாக்கலாகும் கிரிமினல் வழக்குகள், குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின்கீழ் 2020-ம் ஆண்டு தாக்கலான ரிட் மனுக்கள் ஆகியவற்றை விசாரிக்கிறார்.

நீதிபதி ஸ்ரீமதி, 2017-ம் ஆண்டு வரை தாக்கலாகி நிலுவையில் உள்ள தொழிலாளர் மற்றும் சேவை தொடர்பான ரிட் மனுக்களை விசாரிக்கிறார். நீதிபதி விஜயகுமார், 2005-ம் ஆண்டு வரை தாக்கலாகி நிலுவையில் உள்ள 2-ம் நிலை அப்பீல் மனுக்களை விசாரிக்கிறார்.

மேற்கண்ட தகவலை சென்னை ஐகோர்ட்டு பதிவுத்துறை வெளியிட்டுள்ளது.

 

Tags :

Share via