வதந்திகளை பரப்பாதீர்கள் – பெண் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி பரபரப்பு ஆடியோ 

by Editor / 13-11-2021 09:25:58pm
வதந்திகளை பரப்பாதீர்கள் – பெண் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி பரபரப்பு ஆடியோ 

நெல்லை மாநகர ஆயுதப்படை குடியிருப்பைச் சேர்ந்தவர் மகேஸ்வரி (45). பாளை. போக்குவரத்து பிரிவில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் கடந்த 2020ம் ஆண்டு பாளை வஉசி மைதானத்தில் நடந்த சுதந்திர தின விழாவின் போது போலீஸ் அணிவகுப்பை தலைமை ஏற்று வழி நடத்தினார்.

சுதந்திர தினத்திற்கு முந்தைய நாள் திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் வசித்து வந்த அவரது தந்தை நாராயணசாமி (83) காலமான நிலையிலும் மனவலிமையுடன் போலீஸ் அணிவகுப்பை முடித்த பின்பே தந்தையின் இறுதிச் சடங்கிற்காக ஊருக்கு சென்றார்.

அவரது துணிச்சல், கடமையை கலெக்டர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பாராட்டினர். இந்நிலையில் கடந்த 7ம் தேதி காலை வீட்டில் அளவுக்கதிகமாக தூக்க மாத்திரைகளை தின்று மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
இதையடுத்து உறவினர்கள் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.


இதுகுறித்து பாளை. பெருமாள்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 10 நாட்களுக்கு முன்னர் போக்குவரத்து நெருக்கடியான காலை மற்றும் மாலை வேளையில் லோடு வாகனங்கள் மாநகரத்திற்குள் வந்து சென்றதாகவும், அதனை ஏன் கட்டுப்படுத்தவில்லை என இன்ஸ்பெக்டருக்கு மெமோ கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாயின.


இதற்கிடையே அவரது கணவர் பாலமுருகன், நெல்லை மாநகர நுண்ணறிவு பிரிவிலிருந்து பாளையங்கோட்டை சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கு மாற்றப்பட்டார்.


இந்நிலையில் போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் ஆடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது: பாளை. போக்குவரத்து போலீஸ் உட்கோட்டம் மிகப் பெரியது. பாளை. மாநகரில் போக்குவரத்து அதிகமாக இருக்கும் அளவுக்கு, போலீசின் எண்ணிக்கை அதிகம் இல்லை. இதை அதிகரிக்க வேண்டும் என்று ஒவ்வொரு ஆய்வு கூட்டத்திலும் நான் வலியுறுத்தியுள்ளேன்.


எனக்கு பாளை போக்குவரத்து உட்கோட்டம் முழுவதும் பொறுப்பு என்பதால் ரோந்து சுற்றிய போது கனரக வாகனம் நுழைந்ததை கவனக்குறைவால் கவனிக்காமல் விட்டிருக்கலாம். இதனால் உயரதிகாரியின் உத்தரவை புறக்கணித்ததாகவோ, பணியை புறக்கணித்ததாகவோ அர்த்தமாகாது.


இதற்கு உயரதிகாரியால் சார்ஜ் மெமோ கொடுக்கப்பட்டது, என்னுடைய தலைவலியை அதிகரித்தது. மற்றபடி நான் நேர்மையான அதிகாரி. தொடர்ந்து பணியாற்ற விரும்புகிறேன்.


இந்த ஆடியோவை வெளியிட காரணம் என்னவென்றால், என்னை சந்திக்கும் கல்லூரி, பள்ளி மாணவிகள் உங்களைப் போன்ற போலீஸ் அதிகாரியாக வர வேண்டும் என்று விரும்புவதாக கூறுவர்.


எனக்கு தற்கொலை எண்ணம் சிறிதும் கிடையாது. எனது குடும்பம் நல்ல நிலையில் உள்ளது. தற்கொலை செய்ய வேண்டிய அவசியமில்லை. தொடர்ந்து சிறப்பாக பணியாற்றுவேன். எனவே வதந்திகளை, தவறான செய்திகளை பரப்பாதீர்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

Tags :

Share via