ஒரே வாரத்தில் 6½ லட்சம் பேருக்கு ஒமைக்ரான்

by Admin / 22-12-2021 01:54:18pm
  ஒரே வாரத்தில் 6½ லட்சம் பேருக்கு ஒமைக்ரான்


சீனாவில் தோன்றிய கொரோனாவால், உலகின் பிற எந்த நாட்டையும் விட வல்லரசு நாடான அமெரிக்காதான் கூடுதல் பாதிப்புக்கு ஆளானது. 

இப்போது தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்டு உலகமெங்கும் கால் பதித்து வருகிற ஒமைக்ரானும் அமெரிக்காவை பதம்பார்க்கத் தொடங்கி இருக்கிறது.
 
ஒமைக்ரான் தொற்றுக்கு உலக அளவில் முதல் பலியை இங்கிலாந்து பதிவு செய்துள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவிலும் ஒமைக்ரான் முதல் களப்பலியை ஏற்படுத்தி உள்ளது.

அங்கு டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த 50 வயது கடந்த ஒருவர் இந்த தொற்றால் இறந்துள்ளார். இவர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர், ஏற்கனவே கொரோனா பாதிப்புக்கு ஆளானவர் என தகவல்கள் கூறுகின்றன.

தற்போது அமெரிக்காவில் பெருந்தொற்று பாதிப்புக்குள்ளாகிற பலருக்கும் ஒமைக்ரான் தொற்று பாதிப்புதான் உறுதியாகி வருகிறது.

கடந்த வாரத்தை பொறுத்தமட்டில் புதிதாக கொரோனா பாதிப்புக்கு ஆளானோரில் 73 சதவீதத்தினருக்கு ஒமைக்ரான் தொற்றுதான் கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டுள்ள தரவுகள், ஒரு வாரத்தில் ஒமைக்ரான் பாதிப்பு 6 மடங்காக பெருகி இருப்பதை காட்டுகின்றன.

நியூயார்க், தென்கிழக்கு, மத்திய மேற்கு, பசிபிக் வடமேற்கு பகுதிகளில் கொரோனா பாதிப்புக்குள்ளானோரில் 90 சதவீதத்தினர் ஒமைக்ரான் தொற்றுக்கு ஆளானவர்கள்தான்.

எண்ணிக்கையின் அடிப்படையில் பார்த்தால் அமெரிக்காவில் கடந்த வாரம் 6½ லட்சம் பேர் ஒமைக்ரான் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.

நவம்பர் மாத இறுதி வரை கொரோனா பாதிப்பில் டெல்டா வைரஸ் தொற்று 99.5 சதவீதம் இருந்தது. இப்போது டெல்டா வைரஸ் இடத்துக்கு ஒமைக்ரான் விரைந்து வந்து கொண்டிருக்கிறது.

இதுபற்றி ஸ்கிரிப்ஸ் ரிசர்ச் டிரான்ஸ்லேசனல் இன்ஸ்டிடியூட்டின் தலைவர் டாக்டர் எரிக் டோபோல் கருத்து தெரிவிக்கையில், “பிற நாடுகள் ஒமைக்ரானின் வேகமான வளர்ச்சியை கண்டுள்ளன. 

ஆனால் அமெரிக்கா, குறைந்த காலத்தில் குறிப்பிடத்தக்க அளவுக்கு ஒமைக்ரான் எழுச்சியை சந்தித்துள்ளது. பிற திரிபுகளை விட ஒமைக்ரான் எந்த அளவுக்கு லேசானது என்பது இன்னும் தெளிவாகவில்லை” எனவும் குறிப்பிட்டார்.

 

Tags :

Share via