பாம்பு கடித்து உயிர் பிழைத்த வாவா சுரேசு

by Admin / 08-02-2022 11:05:46am
பாம்பு கடித்து உயிர் பிழைத்த வாவா சுரேசு

வாவா சுரேஷ் பாம்பு பிடிப்பதில் வல்லவர். வீடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் பாம்புகளை பிடித்து அவற்றை அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் கொண்டு விட்டு வருவார்.

இதற்காக மாநிலம் முழுவதும் இருந்து மக்கள் இவரை பாம்பு பிடிக்க அழைப்பார்கள். கடந்த வாரம் கோட்டயம் பகுதியில் பாம்பு பிடிக்க சென்றார். அங்கு நல்ல பாம்பு ஒன்றை பிடித்து சாக்கில் அடைக்கும் போது அவரை பாம்பு கடித்து விட்டது.

இதில் வாவா சுரேஷ் உயிருக்கு ஆபத்தான நிலையில் கோட்டயம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த வாவா சுரேஷ் உடல்நிலை தேறியது. நேற்று அவர் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்த வாவா சுரேஷ் நிருபர்களிடம் கூறும்போது, இது எனக்கு மறு பிறவி. இம்முறை சாவின் விளிம்புக்கு சென்று மீண்டு வந்துள்ளேன். இதற்காக பாம்பு பிடிப்பதில் இருந்து பின்வாங்க மாட்டேன்.

ஆஸ்பத்திரியில் இருந்தபோது என்னை பலர் விமர்சனம் செய்துள்ளனர். நான் பாதுகாப்பாக பாம்பு பிடிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் கிளம்பி உள்ளது. மேலும் என்னை பற்றி வனத்துறை அதிகாரி ஒருவரும் தவறாக கருத்து தெரிவித்துள்ளார்.

என்னை பற்றி யார் என்ன கூறினாலும் நான் சாகும் வரை பாம்பு பிடிப்பேன். கூடுதல் ஜாக்கிரதையுடன் பாம்பு பிடிப்பேன். அதில் இருந்து பின்வாங்க மாட்டேன்.இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே வாவா சுரேஷ், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தபோது அவரை கேரள மந்திரி வாசவன் சந்தித்தார். மேலும் நேற்று அவர் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகும்போதும் ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தார்.

அப்போது அவரிடம் வாவா சுரேசுக்கு சொந்தமாக வீடு இல்லை என்று கூறப்பட்டது. அவர் உடனே மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து வாவா சுரேசுக்கு வீடு கட்டி கொடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
 

 

Tags :

Share via