சர்வதேச விமான போக்குவரத்து சேவை தொடக்கம்

by Staff / 27-03-2022 03:26:58pm
சர்வதேச விமான போக்குவரத்து சேவை தொடக்கம்

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் அனைத்து சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டது.

எட்டு மாதங்கள் வரை நீடித்த பொதுமுடக்கத்தைத் தொடர்ந்து, பின்னர் உள்நாட்டு விமான சேவைகளுக்கு மட்டும் மத்திய அரசு அனுமதி அளித்தது. 

வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இந்தியர்களை வந்தே பாரத் திட்டத்தின் மூலம் மத்திய அரசு அழைத்து வந்தது.

இதனிடையே கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 15ம் தேதி முதல் மீண்டும் சர்வதேச விமான சேவையை தொடங்க இந்திய விமான போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டிருந்தது. இருப்பினும் ஒமிக்ரான் பாதிப்பு, கொரோனா 2வது மற்றும் 3ம் அலை காரணமாக இந்த முடிவு கைவிடப்பட்டது. 

இதையடுத்து கொரோனா தொற்று நாடு முழுவதும் படிப்படியாக குறைந்து வருவதையொட்டி இன்று முதல் மீண்டும் வெளிநாட்டு விமான சேவை தொடங்கியுள்ளது.

சுமார் 40 நாடுகளைச் சேர்ந்த 66 விமான நிறுவனங்களின் விமானங்கள் வாரத்தில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான முறை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

இதன்மூலம் விமானப் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வெளிநாட்டு விமானங்கள் வரத் தொடங்கியுள்ளன. சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு முனையத்தில் இருந்து துபாய், மஸ்கட், கொழும்பு, சிங்கப்பூர், வங்கதேசம், லண்டன், சார்ஜா, குவைத், பக்ரைன் ஆகிய நாடுகளுக்கு 30 விமானங்கள் செல்வது குறிப்பிடத்தக்கது.


 

 

Tags :

Share via