இன்று குடியரசுத் தலைவர் தேர்தல் 4,809 பேர் வாக்களிக்க உள்ளனர்.

by Editor / 18-07-2022 08:23:43am
இன்று குடியரசுத் தலைவர் தேர்தல் 4,809 பேர் வாக்களிக்க உள்ளனர்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் வரும் 24ம் தேதியுடன் நிறைவடைகிறது. குடியரசு தலைவர் தேர்தலை தற்போது உள்ள குடியரசு தலைவரின் பதவி காலம் முடியும் முன்னரே நடத்தி முடிக்க வேண்டும்.

அதன்படி, இன்று குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை வரும் 21ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரெளபதி முர்மு குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார்.

மாநிலங்களவை செயலர் பிரமோத் சந்திர மோடி குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான  தலைமை தேர்தல் அதிகாரியாக செயல்படுகிறார். எம்எல்.ஏ.க்கள் வாக்கு  5,43,231 மற்றும் எம்.பி.க்கள் வாக்கு  5,43, 200 என மொத்தம் 10,86,431 வாக்குகள் உள்ளன. மொத்தமாக 4,809 பேர் வாக்களிக்க உள்ளனர்.

குடியரசுத் தலைவர் தேர்தல் நாடாளுமன்ற வளாகத்திலும், மாநில சட்டமன்றங்களிலும் நடைபெறும். குடியரசுத் தலைவரை மக்களவை, மாநிலங்களவை, சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்து தேர்ந்தெடுப்பர். அதே வேளையில் நியமன உறுப்பினர்கள், MLC க்கள் வாக்களிக்க முடியாது.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப் பதிவுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.  இந்த தேர்தலில் வாக்குப்பதிவுக்கு ஓட்டுச் சீட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பச்சை நிறத்தில் வாக்குச்சீட்டும். எம். எல்.ஏ.க்கு ‘பிங்க்’ நிற வாக்குச் சீட்டும் தரப்படும்.

 

Tags : 4,809 people are going to vote in the presidential election today.

Share via