தடுப்புஊசி போடுவதில் தன்னிறைவு பெற்ற மாவட்டமாக வேலூர் மாவட்டம் உள்ளது,அமைச்சர்

by Editor / 21-08-2022 11:25:07am
தடுப்புஊசி போடுவதில் தன்னிறைவு பெற்ற மாவட்டமாக வேலூர் மாவட்டம் உள்ளது,அமைச்சர்

வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி ஆரம்பச் சுகாதார நிலையத்தில் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 34வது மெகா தடுப்பூசி முகாமை தொடக்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மெகா தடுப்பூசி முகாம் தமிழ்நாடு முழுவதும் 50000 இடங்களில் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். மேலும், 18 வயதைக் கடந்தவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுடைய சதவீதம் என்பது தமிழகத்தில் 96.9% எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், இரண்டாவது டோஸ் தடுப்பூசி 89.50 சதவீதமாக இருக்கிறது. அந்த வகையில் இதுவரை தமிழ்நாட்டில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டியவர்களின் எண்ணிக்கை ஒரு 3.5 கோடி அளவில் இருக்கிறது அவர்களை மையமாக வைத்து இன்றைக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருவதாகக் கூறினார். மேலும், வேலூர் மாவட்டத்தில் இன்றைக்கு இந்த தடுப்பூசி போடும் பணிகளைப் பொருத்தவரை தன்னிறைவு பெற்ற மாவட்டங்களில் ஒன்றாக இருந்து கொண்டிருக்கிறது எனத் தெரிவித்தார்.

அடுத்த வாரம் டெல்லிக்குச் சென்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டியாவைச் சந்தித்து தமிழ்நாட்டில், மதுரை & கோவை எய்ம்ஸ் கல்லூரிகள் குறித்தும் காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, தென்காசி மற்றும் பெரம்பலூர் ஆகிய ஆறு மாவட்டங்களுக்கு, புதிதாக அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைக்கக்கோரி வலியுறுத்த இருப்பதாகக் கூறினார். மேலும், காளியாக உள்ள 4,308 அரசு மருத்துவமனையில் பணியிடங்களை இந்த வருடம் அக்டோபர் மாதத்திற்குள் நிரப்ப உள்ளதாகத் தெரிவித்த அவர், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் பயனடைந்தவர்களின் எண்ணிக்கை 85 லட்சத்தைக் கடந்திருப்பதாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், பாலி கிளினிக் ஆரம்பச் சுகாதார நிலையம் மற்றும் துணை சுகாதார நிலையம் மாலை நேரங்களில் நடைபெறும் எனத் தெரிவித்த அவர், மாலை நேரங்களில் கட்டாயமாக துறை சார்ந்த மருத்துவர்கள் மருத்துவமனைகளுக்கு வருவார்கள். தினமும் நான்கு மணி நேரம் நடைபெறும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்புப் பிரிவு மருத்துவர்கள் வருவார்கள். எந்தெந்த நாட்களுக்கு எந்த மருத்துவர்கள் வருகிறார்கள் என்ற விவரங்களை மருத்துவமனை வெளியில் உள்ள தகவல் பலகையில் எழுதி வைக்கப்படும் எனக் கூறினார். மேலும், அமைச்சர் என்ற முறையில் அவ்வப்போது மருத்துவமனைகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ள இருப்பதாகத் தெரிவித்த அவர், பணி நேரங்களில் மருத்துவமனையில் மருத்துவர் மற்றும் இதர அதிகாரிகள் இல்லையென்றால் அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.

தடுப்புஊசி போடுவதில் தன்னிறைவு பெற்ற மாவட்டமாக வேலூர் மாவட்டம் உள்ளது,அமைச்சர்
 

Tags :

Share via