"தடுப்பூசி பற்றாக்குறை உலக சமூகம் முழுவதுக்குமான தோல்வி":- டெட்ராஸ் அதேனாம்

by Editor / 27-06-2021 08:10:30pm

 

ஜெனிவாவில் நடந்த உலக சுகாதார நிறுவன மாநாட்டில் பேசிய அதன் இயக்குநர் டெட்ராஸ் அதேனாம், ‘ஏழை நாடுகளுக்கு இன்னும் தடுப்பூசி சென்றடையவில்லை’ எனக்கூறி, இது உலகளாவிய சமூகத்துக்கான தோல்வியென்று வேதனை தெரிவித்துள்ளார். 
இதுபற்றி பேசியிருக்கும் அவர், “பணக்கார நாடுகள் யாவும், தடுப்பூசி செலுத்தி தங்கள் நாட்டின் இளையவர்களையும் கொரோனாவுக்கு எதிராக மாற்றி வரும் இந்த நேரத்தில், ஏழை நாடுகளில் தடுப்பூசி பற்றாக்குறையால் அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு கூட தடுப்பூசி கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், ஏழை நாடுகளில் இருக்கும் மக்கள், கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்” என அவர் கூறியுள்ளார்.
ஆப்பிரிக்காவில், கடந்த வாரத்தை விடவும் இப்போது புதிய தொற்றாளர்கள் எண்ணிக்கையும், இறப்பும் சுமார் 40% அதிகரித்திருப்பதாகவும், அதற்கு உலகம் முழுக்க பரவி கிடக்கும் டெல்டா வகை கொரோனாவே காரணமென்றும் அவர் கூறியுள்ளார். மேலும் தடுப்பூசி விநியோகத்தில், இந்தளவுக்கு பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் நிலவுவது, “உலக சமூகமே தோற்றதற்கு சமம். உலகளாவிய சமூகத்தின் தோல்வி இது” என அவர் கடுமையாக கூறியுள்ளார்.
“இதற்கு முன்னரேவும் எய்ட்ஸ் தடுப்பூசி விநியோகத்திலும், பணக்கார நாடுகள் பாரபட்சம் காட்டின. தற்போது கொரோனா சூழலிலும், தடுப்பூசி விநியோகத்தில், பிரச்னை உள்ளது. எங்களுக்கும் தடுப்பூசி கொடுங்கள். இதன் பின்னணியில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள்யாவும் உலகம் முழுவதும் பரவிக்கிடக்கும் அநீதி, சமநிலையின்மையையே காட்டுகிறது” என ஏற்றத்தாழ்வுகளால் அவதியுறும் நாடுகளின் குரலாக பேசியிருக்கிறார் டெட்ராஸ்.

 

Tags :

Share via