லோக்சபா தேர்தல் பணிகளுக்காக முழு நேர ஊழியர்களை நியமித்தது பா.ஜ.,.

by Editor / 19-12-2022 10:13:43am
லோக்சபா தேர்தல் பணிகளுக்காக முழு நேர ஊழியர்களை நியமித்தது பா.ஜ.,.

வரும் 2024 லோக்சபா தேர்தலுக்கு இன்னும், 15 மாதங்கள் இருக்கும் நிலையில், அதற்கான பணிகளை, பா.ஜ., துவங்கியுள்ளது.டிசம்பர் 5, 6 தேதிகளில் டில்லியில் நடந்த பா.ஜ., தேசிய நிர்வாகிகள், மாநிலத் தலைவர்கள், மாநில அமைப்பு பொதுச் செயலர்கள் கூட்டத்தில், ஓட்டுச்சாவடி கமிட்டி அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை தேர்தல் பணிகள், கூட்டணி வியூகம் போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அதன்படி, தமிழகத்தில் லோக்சபா தேர்தல் பணிகளை மேற்கொள்ள, 234 சட்டசபை தொகுதிகளுக்கும் முழுநேர ஊழியர்களை,பா.ஜ., நியமித்து வருகிறது. இதுவரை 150 தொகுதிகளுக்கு முழுநேர ஊழியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

'விஸ்தாரக்' எனப்படும் இந்த குறுகிய கால முழுநேர ஊழியர்களுக்கு, மாதம் 15 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை, தங்குமிடம், உணவு உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.

முழுநேர ஊழியர்கள், கட்சியின் வழக்கமான பணிகளில் தலையிடாமல் இருக்க, அதே தொகுதியைச் சாராத, வேறு தொகுதியில் உள்ளவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சட்டசபை தொகுதியில் உள்ள ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும், 20 பேர் கொண்ட கமிட்டி அமைத்தல், பா.ஜ.,வினர் மற்றும் ஆதரவாளர்களின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் உள்ளதா என சரிபார்த்தல் போன்ற பணிகளை, இந்த முழுநேர ஊழியர் மேற்கொள்வார்.

லோக்சபா தேர்தல் முடியும் வரை, வீட்டில் தங்காமல், அவரவர்க்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் மட்டுமே தங்கி, பணியாற்ற வேண்டும்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிராமத்தில் அல்லது பகுதியில் இரவு தங்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, பா.ஜ., நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

டிசம்பர் 14-ம் தேதி நடந்த, தமிழக பா.ஜ., மையக் குழு கூட்டத்தில், இது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு உள்ளது.

நற்பெயர்

தமிழக பா.ஜ., பொறுப்பாளர் சி.டி.ரவி, இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, அமைப்பு பொதுச் செயலர் கேசவ விநாயகம், மகளிரணி தேசியத் தலைவர் வானதி, முன்னாள் மாநில தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், முன்னாள் தேசிய செயலர் ஹெச்.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் பேசிய மூத்த தலைவர்கள், 'பா.ஜ.,வின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையிலான செய்திகள் அதிகமான வருகின்றன.

எனவே, ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் பேசும் நிர்வாகிகள், கவனத்துடன் செயல்பட வேண்டும்' என, வலியுறுத்தியுள்ளனர்.

'கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி வலியுறுத்திஉள்ளார்.

மேலும், லோக்சபா தேர்தல் பணிகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு உள்ளது. 39 லோக்சபா தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமிப்பது தொடர்பாகவும், அதற்காக பரிந்துரைக்கப்பட்ட பெயர்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக, பா.ஜ., நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

 

Tags :

Share via