74வது குடியரசு தினம்:சென்னையில் தேசிய கொடியேற்றுகிறார் ஆளுநர்

by Editor / 26-01-2023 07:26:50am
74வது குடியரசு தினம்:சென்னையில் தேசிய கொடியேற்றுகிறார் ஆளுநர்

இன்று நாட்டின் 74வது குடியரசு தினம் நாடு முழுவதும்  கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை காமராஜர் சாலையில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் சென்னை மெரினாவில் உள்ள அரசியல் தலைவர்களின் நினைவிடங்களுக்கு செல்ல நேற்று முதல் பொதுமக்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. நகரின் பல பகுதிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி தீவிர கண்காணிப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.


சென்னை காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா நடைபெற உள்ளது. இதில், ஆளுநர் ஆர்.என்.ரவியை வரவேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முப்படைகளில் தளபதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளை அறிமுகம் செய்து வைக்கிறார். தொடர்ந்து, தேசிய கொடியை ஏற்றி வைக்கும் ஆளுநர், முப்படைகளின் அணிவகுப்பை ஏற்கிறார். இதனையடுத்து, வீர தீர செயல் புரிந்தவர்களுக்கான அண்ணா பதக்கங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார்.

மேலும் குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் தனது ட்விட்டர் பதிவில், இந்நாளில் நமது ராணுவத்துக்கு வணக்கம் செலுத்துவோம். பாரத இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டை காத்து, எதிரி நடவடிக்கைகளை முறியடித்து இன்னுயிரை தியாகம் செய்த தீரம் மிக்க நம் வீரர்களை தேசம் நன்றியுடன் நினைவுகூர்கிறது. அவர்களின் தியாகங்களுக்காக தேசம் எப்போதும் பெருமிதம் கொள்ளும் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via