வருமான வரித்துறை அதிகாரிகள்போல் நடித்து ஆள்கடத்தல்

by Staff / 11-02-2023 12:34:13pm
வருமான வரித்துறை அதிகாரிகள்போல் நடித்து ஆள்கடத்தல்

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகேயுள்ள கவுண்டம்பட்டியில் வசித்து வருபவர் சுப்பையா. ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர் தனக்குச் சொந்தமான தோட்டத்தில் விவசாயம் செய்துவருகிறார். கவுண்டம்பட்டியில் நவகிரக கோயில் ஒன்றை கட்டி வழிபாடு நடத்தி வருகிறார். மூன்று நாட்களுக்கு முன்பு சுப்பையாவின் வீட்டிற்கு இரண்டு கார்களில் வந்த 5 பேர் தாங்கள் வருமான வரித்துறை அதிகாரி என அறிமுகம் செய்துகொண்டனர்.

சுப்பையா வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக தங்களுக்கு புகார் வந்திருப்பதால் உரிய ஆவணங்கள் மற்றும் கணக்கு வழக்குகளை காட்ட வேண்டும் என கூறினார். தங்களுடன் வருமான வரித்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்கு வரவேண்டும் என கூறி மிரட்டி காரில் அழைத்துச் சென்றனர்.காரில் செல்லும்போது சுப்பையா மீது எந்த வழக்கும் வராமல் பார்த்துக் கொள்கிறோம். அதற்காக தங்களுக்கு 20 லட்ச ரூபாய் லஞ்சமாக தர வேண்டும் என பேரம் பேசி உள்ளனர். இதில் 5 லட்சம் ரூபாயை தங்களுக்கு கொடுத்தால் உடனடியாக விட்டு விடுவோம் என்று கூறியுள்ளனர்.

சுப்பையாவை மர்ம கும்பல் வருமான வரித்துறை அதிகாரிகள் என கூறி காரில் அழைத்துச் செல்வதாக தோட்டத்தில் பணியாற்றும் ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதன்பேரில் போலீசார் கடத்தல் கும்பல் சென்ற காரை தேட தொடங்கினர். தங்களை காவல் துறையினர் தேடுவதை அறிந்த மர்ம கும்பல் சுப்பையாவை திருமங்கலம் செல்லும் பிரதான சாலையில் டி.குன்னத்தூர் அருகில் இறக்கி விட்டுவிட்டு சென்று விட்டனர்.

கடத்தல் கும்பலிடம் இருந்து தப்பி வந்த சுப்பையாவிடம் டி.கல்லுப்பட்டி காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரின் பதிவு எண்ணை ஆய்வு செய்து பார்த்த போலீசார் கடத்தலில் ஈடுபட்டவர்கள் யார் என விசாரணை நடத்தினர். இரண்டு நாள் தேடுதல் வேட்டைக்கு பிறகு சாந்தி (வயது
45) முருகன் (வயது 42) சபரி புகழ் (வயது 35) ஹரிஷ் (வயது 32) ஈசாக் முகமது(வயது42) முகமது ஜாகிர் உசேன் (வயது 38) பாலமுருகன் (வயது34 ) ரிஷி குமார்(வயது 34) தினேஷ்குமார் (வயது 38) ஆகிய 9 பேரையும் கைது செய்தனர். விசாரணைநடத்திய பிறகு இவர்கள் பயன்படுத்திய இரண்டு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்தக் கடத்தல் சம்பவம்  இப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகள் அனைவரையும் பேரையூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி அவர்களை மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட கும்பல் எங்கிருந்து வந்தனர்? சுப்பையா அதிக பணம் வைத்திருப்பது எவ்வாறு தெரியவந்தது? இவர்களது திட்டத்துக்கு மூளையாக இருந்தது யார்? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via