பப்ஜி மதன் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது 

by Editor / 24-07-2021 03:57:00pm
பப்ஜி மதன் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது 

 

தடை செய்யப்பட்ட பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை யூடியூப் சேனல் மூலம் ஆபாசமாகப் பேசிக்கொண்டே விளையாடியதுடன், ஆபாச யூடியூப் தளம் நடத்தியதாக, பப்ஜி மதன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகம், புளியந்தோப்பு காவல் நிலையம், சைபர் கிரைம் பிரிவிலும், முதலமைச்சர் தனிப் பிரிவிலும், சென்னை மத்திய குற்றப்பிரிவிலும் புகார்கள் குவிந்தன.


இந்த புகார்களின் அடிப்படையில், யூடியூபர் மதன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸார், பெண்களை ஆபாசமாகச் சித்தரித்துப் பேசுதல், அவதூறாகப் பேசுதல், தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துதல், தடை செய்யப்பட்ட செயலியைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்தனர்.


விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பிய நிலையில், தலைமறைவாகி இருந்த மதன் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடியானது. இதனால் மதன் தொடர்ந்து தலைமறைவாக இருந்தார். அவருடன் யூடியூப் நடத்திய பங்குதாரரான அவரது மனைவியை போலீஸார் கைது செய்தனர். மதனைத் தேடி வந்த நிலையில், கடந்த ஜூன் 18ஆம் தேதி தருமபுரியில் போலீஸார் கைது செய்தனர்.


ஜாமீன் கோரி மதன் தாக்கல் செய்த வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வக்குமார் முன்  விசாரணைக்கு வந்தது. விசாரணை இன்னும் முடிவடையாத நிலையில் ஜாமீன் வழங்கினால் விசாரணையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதாலும், சாட்சிகளைக் கலைக்க வாய்ப்புள்ளதாலும் பப்ஜி மதனின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், பப்ஜி மதன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க, சென்னை மாநகரக் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

 

Tags :

Share via