நிதி நிறுவன ஊழியர் கொடூரக் கொலை

by Staff / 01-03-2023 04:23:07pm
நிதி நிறுவன ஊழியர் கொடூரக் கொலை

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள போடிநாயக்கன்பட்டி மண்கரடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார். கூலித்தொழிலாளி. இவருடைய மகன் சசிகுமார் (27). இவர் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கடன் தவணை வசூலிக்கும் முகவராக வேலை செய்து வந்தார். பிப்ரவரி 26ம் தேதி காலை வழக்கம்போல் வேலைக்குச் சென்ற சசிகுமார், இரவு 10 மணியாகியும் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து பெற்றோர் அவருடைய அலைபேசிக்கு தொடர்பு கொண்டனர். அப்போது சசிகுமார், இன்னும் கொஞ்ச நேரத்தில் வீட்டுக்கு வந்துவிடுவதாகக் கூறியுள்ளார். ஆனால், நள்ளிரவைக் கடந்த பிறகும் அவர் வீட்டுக்கு வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் மீண்டும் மகனின் அலைபேசிக்கு தொடர்பு கொண்டனர். அப்போது அவருடைய அலைபேசி அணைத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வந்தது.

இந்நிலையில், திங்கட்கிழமை (27. 02. 2023) அதிகாலை, அந்த ஊரின் அருகே உள்ள காட்டுப்பகுதியில் சசிகுமார் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுச் சடலமாகக் கிடப்பது தெரியவந்தது. உடலின் பல இடங்களில் அரிவாளால் வெட்டப்பட்ட காயங்கள் இருந்தன. சசிகுமாரின் பெற்றோர் மகனின் சடலத்தைக் கண்டு கதறி அழுதனர்.

சசிகுமாரின் பெற்றோர் எருமப்பட்டி காவல்நிலையத்தில் புகாரளித்ததைத் தொடர்ந்து காவல் ஆய்வாளர் குமரவேல் பாண்டியன், உதவி ஆய்வாளர் பூபதி மற்றும் காவலர்கள் நிகழ்விடம் விரைந்தனர். சடலத்தைக் கைப்பற்றிய காவல்துறையினர் உடற்கூராய்வுக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, சசிகுமாரின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு திரண்டனர். கொலையாளிகளை உடனடியாகக் கைது செய்யக்கோரி அவர்கள் திடீரென்று முழக்கங்களை எழுப்பினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் உருவானது.

கொலையாளிகளை விரைவில் கைது செய்துவிடுவோம் என்று காவல்துறையினர் சமாதானம் செய்ததையடுத்து போராட்டத்தைக் கைவிட்டனர். முதற்கட்ட விசாரணையில், சசிகுமாருக்கு பெண்கள் சிலருடன் இருந்த தவறான தொடர்பால் கொலை நடந்திருப்பது தெரியவந்துள்ளது. திருமணம் ஆகாத சசிகுமார், நிதி நிறுவனத்திலும் வங்கியிலும் கடன் வாங்கித் தருவதாகப் பல பெண்களைத் தனது வலையில் விழவைத்திருந்ததாகவும் அவர்களுடன் முறையற்ற உறவில் இருந்து வந்துள்ளதும் தெரியவந்துள்ளது. கடந்த சில மாதங்களாகக் குறிப்பிட்ட பெண் ஒருவருடன் மிக நெருக்கமான தொடர்பில் இருந்துள்ளார்.

இதையறிந்த அந்தப் பெண்ணின் கணவர், இருவரையும் கையும் களவுமாகப் பிடித்து எச்சரித்துள்ளார். அதன் பிறகும் அவர்கள் தொடர்பைக் கைவிடாமல் தொடர்ந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கணவர், சசிகுமாரை கொலை செய்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இதுமட்டுமின்றி, கடன் வசூல் தொடர்பாக யாராவது ஆத்திரத்தில் கொலை செய்தார்களா? அண்மையில், நீதிமன்ற விசாரணையில் உள்ள ஒரு வழக்கில் சசிகுமார் சாட்சியம் அளித்திருந்தார். அதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாகக் கொலை நடந்திருக்குமோ? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. சம்பவத்தன்றும் அதற்கு முன்பாகவும் சசிகுமாரின் அலைபேசியில் பேசியவர்கள் யார் யார் என்ற விவரங்களைக் காவல்துறையினர் சேகரித்து வருகின்றனர். அந்த எண்களுடன் தொடர்பு கொண்டும் விசாரித்து வருகின்றனர்.

சசிகுமாரின் பெற்றோர் கடைசியாகத் தொடர்பு கொண்டு பேசியபோது அலைபேசி சமிக்ஞை கிடைத்த இடம், கடைசியாக எந்த இடத்தில் அலைபேசி அணைத்து வைக்கப்பட்டது? அந்த இடங்களில் ஏதேனும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா? எனத் தொழில்நுட்ப ரீதியாகவும் விசாரணை நடத்தி வருகின்றனர். சடலம் கிடந்த இடத்தை வைத்துப் பார்க்கையில், அவர் வீட்டுக்கு வரும் வழியில் மர்ம நபர்கள் வழிமறித்துக் கொலை செய்திருக்கலாம் அல்லது வேறு ஒரு இடத்தில் கொலை செய்துவிட்டு சடலத்தை காட்டுப்பகுதியில் வீசிச்சென்றிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

 

Tags :

Share via