குழந்தைகளை தந்தையின் கட்டுப்பாட்டில் அனுப்ப மறுப்பு

by Staff / 03-09-2023 01:04:01pm
 குழந்தைகளை தந்தையின் கட்டுப்பாட்டில் அனுப்ப மறுப்பு

காதலித்து இரு வீட்டார் ஏற்பாட்டுடன் மணமுடித்து அமெரிக்காவில் வாழ்ந்து வந்த தம்பதிக்கு, 12 வயது பெண் குழந்தையும், 2 வயது ஆண் குழந்தையும் உள்ள நிலையில், கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இருவரும் பிரிந்த நிலையில், குழந்தைகளுடன் மனைவி சென்னையில் வசித்துவருகிறார். இந்நிலையில், மனைவியிடம் உள்ள தன் குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கணவன் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஆர். என். மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தபோது, கணவர் தரப்பில குழந்தைகளை அமெரிக்கா அழைத்துச்செல்ல இருப்பதால், இந்த மனுவை தாக்கல் செய்திருப்பதாகவும், கைக்குழந்தையாக உள்ள மகனை அனுப்பாவிட்டாலும், பள்ளி படிப்பில் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளதால், சிறப்பான கல்வியை அளிப்பதற்காக மகளை மட்டுமாவது அழைத்து செல்ல அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. மனைவி தரப்பில், இரு குழந்தைகளையும் கணவனுடன் அனுப்ப முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது. வழக்கின் விசாரணையின்போது, இரு குழந்தைகளையும் அழைத்து நீதிபதி மஞ்சுளா அவர்களிடம் பேசினார். பின்னர் அவர், தாயின் அரவணைப்பில் இந்தியாவில் சந்தோசமாக இருக்கும் மைனர் குழந்தைகளை, அமெரிக்காவில் இருக்கும் தந்தையின் கட்டுப்பாட்டில் வைத்திருக்க அனுமதித்தால், அவர்களது வாழ்வில் சமநிலையின்மையை உருவாக்கும் என்பதால் தந்தையின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்

 

Tags :

Share via