கனமழையின் காரணமாக ஆயிரம் ஏக்கர் தாளடி நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியது.

by Editor / 26-11-2023 09:06:52am
கனமழையின் காரணமாக ஆயிரம் ஏக்கர் தாளடி நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியது.

திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 1 லட்சத்து 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தாளடி நெல் பயிர் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் முழுமையாக வந்து சேராத நிலையில் மழை நீரை நம்பி தாளடி நெல் சாகுபடி பணிகளில் திருவாரூர் மாவட்ட விவசாயிகள் ஈடுபட்டனர். இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து தாளடி நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வந்ததன் காரணமாக 30 நாட்கள் ஆன தாளடி நெல்பயிர்கள் மழை நீரில் மூழ்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக திருவாரூர் அருகே மேலமணலி, கருப்பூர், ஈழகொண்டான், ராமானுஜமணலி, ஓகைபேரையூர், நொச்சிக்குடி உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரம் ஏக்கர் தாளடி நெல் பயிர்கள் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக நெல் பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளது. மேலும் தொடர்ந்து இந்த மழை நீடித்தால் நெல் பயிர்கள் அனைத்தும் அழுகிவிடும் சூழல் உருவாகும் எனவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில் வங்கியில் கடன் வாங்கியும் வட்டிக்கு கடன் வாங்கியும் நெல் சாகுபடியில் ஈடுபட்டு வருகிறோம். ஏற்கனவே தண்ணீர் இல்லாமல் குறுவை நெல் சாகுபடி முழுமையாக பாதிக்கப்பட்டது. தற்பொழுது அதிக அளவில் மழை பெய்து தாளடி நெல் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது வாங்கிய கடனை எப்படி அடைக்கப் போகிறோம் என்று தெரியவில்லை. நெல் பயிரில் தேங்கியுள்ள மழை நீரை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் மீண்டும் மழை பெய்தால் ஒட்டுமொத்தமாக நெல் பயிர்கள் பாதிக்கும். ஆகவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தேங்கியுள்ள மழை நீரை வடிய வைக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். 

 

Tags : கனமழையின் காரணமாக ஆயிரம் ஏக்கர் தாளடி நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியது.

Share via