குற்றங்கள் நடக்காமல் தடுக்கின்ற துறையாக காவல்துறை மாறவேண்டும்: முதல்வர்

by Editor / 30-07-2021 10:37:24am
குற்றங்கள் நடக்காமல் தடுக்கின்ற துறையாக காவல்துறை மாறவேண்டும்: முதல்வர்

தமிழ்நாடு காவல் உயர்பயிற்சியகத்தில் நடைபெற்ற பயிற்சி துணைக் கண்காணிப்பாளர்கள் பயிற்சி நிறைவு அணிவகுப்பு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, புதிதாகக் காவல் களத்தில் இறங்கி உள்ள துணைக் கண்காணிப்பாளர்கள் அனைவருக்கும் முன்னுதாரணமாகச் சொல்லத்தக்க மனிதராக உங்கள் காவல்துறைத் தலைமை இயக்குநரே இருக்கிறார்.

1987ஆம் ஆண்டு கோபிச்செட்டிபாளையத்தில் உதவிக் கண்காணிப்பாளராகப் பணிக்குச் சேர்ந்த சைலேந்திர பாபு இன்று தமிழ்நாட்டின் காவல்துறையின் தலைமைப் பொறுப்புக்கு வளர்ந்துள்ளார் என்றால் அதற்கு அவருடைய உழைப்பும் முயற்சிகளும் மிக மிக முக்கியமானதாக அமைந்திருக்கிறது. அவரைப் போலவே, பல்வேறு திறமைகளையும் நீங்கள் அனைவரும் வளர்த்துக்கொள்ளவேண்டும் என்று உங்களை எல்லாம் கேட்டுக்கொள்கிறேன்.அரசாங்கத்தில் இருக்கும் எத்தனையோ துறைகளைப் போல காவல்துறையும் ஒரு துறைதான் என்று நீங்கள் நினைத்துவிடக் கூடாது. ஒரு அரசிடம் இருந்து மக்கள் முதலில் எதிர்பார்ப்பது, அமைதியைத்தான். அந்த அமைதியை ஏற்படுத்தித் தர வேண்டிய பெரும் பொறுப்பு காவல்துறைக்குத்தான் உண்டு. எந்த ஒரு நாட்டிலும் சட்டம் ஒழுங்கு சிறப்பாக அமைந்துவிட்டால், பொதுமக்கள் பாதுகாப்பான சூழலை உணர்ந்துவிட்டால் அந்த நாட்டில் மற்ற செயல்களைச் சரியாகச் செய்யலாம்.என்றார்.

 

Tags :

Share via