அன்னதான பிரபுவாக வலம் வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் மக்கள் வெள்ளத்தில் துவங்கியது.

by Editor / 29-12-2023 04:53:28pm
அன்னதான பிரபுவாக வலம் வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் மக்கள் வெள்ளத்தில் துவங்கியது.

அன்னதானபிரபுவே என சபரிமலை ஐயப்பனை மட்டுமே சொல்வார்கள் ஆனால் வாழும் அன்னதானப்பிரபுவை நாம் கண்ணால் கண்டது விஜயகாந்த் வடிவில் என்பதை அவரது மரணம் நிகழ்ந்ததினத்தில்தான் தெரியக்கூடிய நிலை உருவாகியுள்ளது.

மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் 1952-ம் ஆண்டு, ஆகஸ்டு 25-ம் தேதி அழகர்சாமி-ஆண்டாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் விஜயராஜ் என்கிற விஜயகாந்த். 

சிறு வயது முதலே சினிமாமீது இருந்த பிடிப்பின் காரணமாக, பல பள்ளிகள் மாறியும் அவரால் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடிந்தது. அதேநேரம் தான் விரும்பிப் பார்க்கும் எம்.ஜி.ஆரின் படங்களை சீன் பை சீனாகத் தன் நண்பர்களிடம் விவரிக்கும் அளவுக்கு சினிமா மீது அவருக்கு ஆர்வம் இருந்தது. படிப்பை நிறுத்திய பிறகு கீரைத்துரையில் இருக்கும் தன் தந்தையின் அரிசி ஆலையில் பணிபுரிந்தார்.

தனது நண்பர்களின் உந்துதலின் பெயரிலும், தனக்கிருந்த ஆர்வத்தாலும் சினிமாவில் நடிப்பது என முடிவுசெய்து மதுரையிலிருந்து சென்னைக்கு வந்தார். பல்வேறு அவமானங்கள், புறக்கணிப்புகளுக்கு மத்தியில், 1979-ம் ஆண்டு எம்.ஏ.காஜாவின் இயக்கத்தில் வெளியான `இனிக்கும் இளமை’ படத்தில் நடித்து, தன் திரைப்பயணத்தைத் தொடங்கினார். விஜயராஜ் என்ற தன் பெயரை விஜயகாந்த் என மாற்றிக்கொண்டார். `சட்டம் ஒரு இருட்டறை’, `தூரத்து இடிமுழக்கம்’, `அம்மன்கோவில் கிழக்காலே’, `உழவன் மகன்’, `சிவப்பு மல்லி’ என வெற்றிப்படங்களைக் கொடுத்து தமிழின் முன்னணிக் கதாநாயகனாக வலம்வந்தார். கிட்டத்தட்ட 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த விஜயகாந்த், 1984-ல் மட்டும் ஒரே ஆண்டில் 18 படங்களில் நடித்து சினிமாத்துறையில் வரலாற்றுச் சாதனை புரிந்தார்.

1999-ம் ஆண்டு நடிகர் சங்கத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் விஜயகாந்த். பல ஆண்டுகளாக அடைக்க முடியாமல் இருந்த நடிகர் சங்கக் கடனை சிங்கப்பூர், மலேசியா என தமிழர்கள் அதிகம் வாழும் வெளிநாடுகளில் நட்சத்திரக் கலை விழாக்கள் நடத்தி வட்டியும் முதலுமாக அடைத்தார். மேலும், நலிவடைந்த கலைஞர்களுக்கு உதவி செய்வதற்காக ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகம் செய்து, பெரும் தொகையை வங்கியில் டெபாசிட் செய்தார். 

`தென்னிந்திய, அகில இந்திய' என்றிருந்த தனது ரசிகர் மன்றத்தின் பெயரை 1982-ல் `தமிழ்நாடு விஜயகாந்த் தலைமை ரசிகர் மன்றம்’ எனவும் பெயர் மாற்றம் செய்தார்.

2000-ம் ஆண்டு, பிப்ரவரி 12-ல் தனது ரசிகர் மன்றத்துக்கென தனிக்கொடியை அறிமுகப்படுத்தினார். அதைத் தொடர்ந்து, 2001-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் பல்வேறு இடங்களில் சுயேச்சையாகப் போட்டியிட்டு, பலர் வெற்றியும் அடைந்தனர். 2002–ல் `ராஜ்ஜியம்’ படத்திலிருந்து அரசியல் குறித்த வசனங்கள் அவரின் படங்களில் பட்டாசாக வெடிக்கத் தொடங்கின. அப்படி, விஜயகாந்தின் இந்த அரசியல் நகர்வுகளைப் புரிந்துகொண்டதாலேயே ஆளும் அரசியல் கட்சிகள் அவருக்குப் பல நெருக்கடிகளைக் கொடுத்துவந்தன. அதேவேளையில், அரசியலுக்கு வர, சரியான களத்துக்காக, காரணத்துக்காகக் காத்துக்கொண்டிருந்தார் விஜயகாந்த். கள்ளக்குறிச்சியில் தன் ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவரின் திருமணவிழாவில் விஜயகாந்த் வருகையை முன்னிட்டு கட்டப்பட்ட மன்றக் கொடிக்கம்பங்களை பா.ம.க-வினர் வெட்டிச் சாய்த்ததாகச் சொல்லப்பட்டது.

தொடர்ந்து, நடந்த திருமண நிகழ்வில் ராமதாஸையும், அவரின் மகன் அன்புமணி ராமதாஸையும் விஜயகாந்த் விமர்சிக்க, பதிலுக்கு விஜயகாந்தை ராமதாஸ் விமர்சிக்க, ராமதாஸ் - விஜயகாந்த் மோதல், பா.ம.க தொண்டர்கள் – விஜயகாந்த் ரசிகர்கள் என விரிவடையத் தொடங்கியது. பல இடங்களில் விஜயகாந்தின் மன்றக்கொடிகள் வெட்டிச் சாய்க்கப்பட, மன்ற நிர்வாகிகள் கடுமையாகத் தாக்கப்பட்டனர். விஜயகாந்த் நடித்த `கஜேந்திரா’ படத்துக்கு ராமதாஸால் சிக்கல் எழுந்தது. விஜயகாந்தைக் கடுமையாக விமர்சித்து வட மாவட்டங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

கண்கள் சிவக்க வெகுண்டெழுந்தார் நடிகர் விஜயகாந்த். ஊர் ஊராகச் சென்று தன் ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்திக்க ஆரம்பித்தார். சென்ற இடங்களிலெல்லாம் விஜயகாந்துக்கு பலத்த வரவேற்பு கிடைத்தது. விஜயகாந்தைக் காண மக்கள் கூட்டம் அலைமோதியது. திருவண்ணாமலையில் கட்சி அறிவிப்பு, ஈரோட்டில் கட்சி தொடங்கும் தேதி, மாநாடு அறிவிப்பு என அதிரடிகாட்டத் தொடங்கினார் விஜயகாந்த். அந்தநேரத்தில் கோயம்பேடு மேம்பால விரிவாக்கத்துக்காக விஜயகாந்தின் மண்டபம் கையகப்படுத்தவிருப்பதாகத் தேசிய நெடுஞ்சாலைத்துறையிடமிருந்து விஜயகாந்துக்கு நோட்டீஸ் பறந்தது. இந்தநிலையில், 2005-ம் ஆண்டு, செப்டம்பர் 14-ம் தேதி மிகப்பெரிய மாநாட்டை மதுரையில் நடத்தி, ``தேசிய முற்போக்கு திராவிட கழகம்” எனும் அரசியல் கட்சியைத் தொடங்கினார் விஜயகாந்த்.

கட்சி ஆரம்பித்து ஓராண்டு நிறைவடையாத நிலையில், 2006-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், தனித்துப் போட்டி என்று கூறி 232 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியவர், பா.ம.க-வின் கோட்டையான விருத்தாசலம் தொகுதியில் அமோக வெற்றிபெற்றார். மற்ற வேட்பாளர்கள் தோல்வியடைந்தாலும் கணிசமான வாக்குகளைப் பெற்று, தே.மு.தி.க-வுக்கு 8.4 சதவிகித வாக்குகளைப் பெற்றுத்தந்தனர். அதைத் தொடர்ந்து, 2009-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும் தனித்து நின்று, தோல்வியைத் தழுவினாலும் 10 சதவிகித வாக்குகளை தே.மு.தி.க பெற்றது.

தனித்தே போட்டியிட்டுவந்த விஜயகாந்த், முதன்முறையாக 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தார். 41 இடங்களில் போட்டியிட்ட தே.மு.தி.க., 29 இடங்களில் வெற்றிபெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது. ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற விஜயகாந்த் முதன்முறையாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரானார்.பாரம்பரியமான தமிழக சட்டமன்றவரலாற்றில் தேமுதிக எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது வரலாற்று சிறப்பாக பார்க்கப்பட்டது. 

2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்து நடைபெற்ற முதல் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே விஜயகாந்துக்கும் ஜெயலலிதாவுக்கும் மோதல் ஏற்பட்டு, அ.தி.மு.க-தே.மு.தி.க கூட்டணி முறிந்தது. 2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்று தேர்தலைச் சந்தித்த தே.மு.தி.க., போட்டியிட்ட 14 தொகுதிகளிலும் படுதோல்வியடைந்தது.

2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ம.தி.மு.க., வி.சி.க., த.மா.கா., கம்யூனிஸ்ட் கட்சிகள் அங்கம்வகித்த மக்கள் நலக்கூட்டணியில் இணைந்து, முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தேர்தலைச் சந்தித்தார் விஜயகாந்த். ஆனால், தேர்தல் முடிவில் ம.ந.கூட்டணி உட்பட தே.மு.தி.க-வும் போட்டியிட்ட 104 தொகுதியிலும் படுதோல்வியடைந்தது. உளுந்தூர்பேட்டையில் போட்டியிட்ட விஜயாகாந்த் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டு டெபாசிட் இழந்தார். 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும் அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணியில் இடம்பெற்று நான்கு தொகுதியில் மட்டுமே போட்டியிட்ட தே.மு.தி.க அனைத்திலும் படுதோல்வியடைந்தது.

தனித்துப் போட்டியிட்டபோது 8.4%, 10% ஆக இருந்த தே.மு.தி.க-வின் வாக்குவங்கி, கூட்டணிக்குச் சென்ற பின்னர் 7.9%, 6.1% எனக் குறைந்து 2016 சட்டமன்றத் தேர்தலில் 2.4% ஆகச் சரிந்தது. நிர்வாகிகள் பலர் அ.தி.மு.க-வுக்கும் தி.மு.க-வுக்கும் சென்றனர். போதாக்குறைக்கு விஜயகாந்தின் உடல்நிலையும் மோசமடைந்தது. தொடர்ந்து, 2021 சட்டமன்றத் தேர்தலில் அ.ம.மு.க-வுடன், தே.மு.தி.க கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்து படுதோல்வி அடைந்தது.

சட்டமன்றத்தில் கடுமையாக நடந்துகொண்டது, வேட்பாளரை அடித்தது,மனைவி மைத்துனர் ஆதிக்கத்தில் கட்சியைவிட்டது, செய்தியாளர்களிடம் கோபத்துடன் நடந்து கொண்டது, தூ என துப்பியது இப்படி இவர் மீது முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள் பல. அதனாலேயே திமுக சார்பு தமிழக ஊடகங்கள் இவரை ரவுண்டு கட்டி அடித்தன. துர்பிரசாரங்கள் மூலம் விஜயகாந்தை ஒழித்துக் கட்டும் வேலையில் வெற்றி பெற்றன. இருப்பினும், தனிப்பட்ட முறையில் அனைவராலும் நேசிக்கக்கூடிய மனிதராகவே திகழ்ந்தார் விஜயகாந்த்.பின்னர் தீடீர் உடல்நலக்குறைவுகாரணமாக பாதிக்கபட்ட அவர் வெளிநாட்டில் சிகிச்சைக்காக அழைத்துசெல்லப்பட்டு சிலமாதங்கள் சிகிச்சைபெற்று திரும்பிய நிலையில் அவரது உடல்நலம் போதிய முன்னேற்றமில்லாமல் இருந்தநிலையில்தான் கட்சியின் பொதுச்செயலாளராக தனது மனைவியை அறிவித்தார்.அன்றையதினம் கட்சியினரை வரவழைத்து அறுசுவை உணவு வழங்கி மீண்டும் தான் ஏழைபங்காளன் என்பதை நிரூபித்தார் அவரது ரசிகர்களாலும்,கட்சியினராழும் அன்போடு கேப்டன் என்றைழைக்கப்படும் விஜயகாந்த்.கடந்த 11 ஆம் தேதி மியாட் மருத்துவமனையில்  இருந்து விடுதிரும்பிய நிலையில் மீண்டும் சிலதினங்களுக்குமுன்னர் அங்கு தீடீர் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்ட நிலையில்  நேற்று அவரது உயிர் அதிகாலையில் பிரிந்தது.அந்தநேரத்திலிருந்து தற்போது அடக்கம் செய்யும் வரை தமிழக முதல்வர் முதல் அனைத்துக்கட்சிகளை சார்ந்த முக்கிய தலைவர்கள்,நிர்வாகிகள்,அமைச்சர்கள்,சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,கமல்ஹாசன் உள்ளிட்ட ஏராளமான முன்னணி நடிகர்கள்,நடிகைகள், என அனைவரும் திரண்டுவந்து அஞ்சலியை செலுத்திவருகின்றனர்.அவரது பூதவுடல் தீவுத்திடலிலிருந்து கோயம்பேட்டிலுள்ள தேமுதிக அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் அவரது உடல் அடக்கம் செய்ய தயார் செய்யப்பட்டுள்ளபகுதியை நோக்கி ஆயிரக்கணக்கான உள்ளங்களின் கண்ணீர் துளிகளோடு  இறுதி ஊர்வல வாகனத்தில் அவரது மனைவி பிரேமலதா,மகன்கள் மற்றும் மைத்துனர் சுதீஷ் ஆகியோர் அமர்ந்து அவரது உடலை அடக்கம் செய்ய கொண்டு சென்றவண்ணம் உள்ளனர்.அன்னதானபிரபுவே என சபரிமலை ஐயப்பனை மட்டுமே சொல்வார்கள் ஆனால் வாழும் அன்னதானப்பிரபுவை நாம் கண்ணால் கண்டது விஜயகாந்த் வடிவில் என்பதை அவரது மரணம் நிகழ்ந்ததினத்தில்தான் தெரியக்கூடிய நிலை உருவாகியுள்ளது.நேற்றும் இன்றும் பாரபட்சமில்லாமல் அனைத்து செய்தி தொலைக்காட்சிகளும் கட்சி வேறுபாடின்றி  தேமுதிக தலைவரின் மரண செய்தியை நேரடி ஒலிப்பரப்பு செய்துஅந்தமாசற்ற மனிதனின் இறுதி ஊர்வலத்தை தற்போது காட்டிதமிழக மக்களை கண்ணீர் கடலில் தத்தளிக்க வைத்துவிட்டனர்.72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையோடு அந்த மாமனிதனின் உடல் அடக்கம் இன்னும் சற்றுநேரத்தில் நடைபெற உள்ளது.

அன்னதான பிரபுவாக வலம் வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் மக்கள் வெள்ளத்தில் துவங்கியது.
 

Tags : அன்னதான பிரபுவாக வலம் வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் மக்கள் வெள்ளத்தில் துவங்கியது.

Share via