அழைப்பு விடுத்தும் எடப்பாடி பழனிசாமி வரவில்லை- துரைமுருகன்

by Editor / 03-08-2021 03:45:35pm
அழைப்பு விடுத்தும்  எடப்பாடி பழனிசாமி வரவில்லை-  துரைமுருகன்

தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழாவையொட்டி, முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவப் படத் திறப்பு விழா சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்றது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்தார்.

தமிழக ஆளுநர், பல்வேறு கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டனர். ஆனால் அ.தி.மு.க இந்நிகழ்ச்சியைப் புறக்கணித்தது.

ஜெயலலிதா படத்திறப்பு நிகழ்வின்போது தி.மு.க புறக்கணித்ததால் கலைஞர் படத்திறப்பில் அ.தி.மு.க பங்கேற்கவில்லை என அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார்.

இந்நிலையில், செய்தியாளர் சந்திப்பின்போது இதுதொடர்பான கேள்விக்குப் பதிலளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், "ஜெயலலிதா படத்திறப்பு விழாவிற்கு அ.தி.மு.க சார்பில் அழைப்பிதழ் மட்டுமே அனுப்பப்பட்டது, தொலைபேசியில் அழைக்கவில்லை. ஜெயலலிதா படத்திறப்புக்கு முறைப்படி அழைக்காததாலேயே தி.மு.க பங்கேற்கவில்லை.

ஆனால், முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞரின் படத்திறப்பில் பங்கேற்க அழைப்பிதழ் அனுப்பியதுடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி எடப்பாடி பழனிசாமிக்கு நானே தொலைபேசியில் அழைப்பு விடுத்தேன்.

குடியரசுத்தலைவர், ஆளுநர், சபாநாயகர் அமர்ந்திருக்கும் வரிசையில் அவர்களுக்கு அருகில் எதிர்க்கட்சித் தலைவருக்கு இருக்கை ஒதுக்கவேண்டும் என்றும், வாழ்த்துரையில் எடப்பாடி பழனிசாமியின் பெயரும் இடம்பெறவேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார்.

நான் அழைப்பு விடுத்தபோது, கலந்தாலோசித்துவிட்டு முடிவு சொல்கிறேன் என்று கூறிய எடப்பாடி பழனிசாமி,விழாவில் பங்கேற்கவில்லை என்று அவைச் செயலாளரிடம் தெரிவித்துவிட்டார்." எனத் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via