கோவில் நிலங்களில் 3 மாதத்தில்  1 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்  ஸ்டாலின் துவக்கி வைத்தார்

by Editor / 07-08-2021 03:39:16pm
 கோவில் நிலங்களில் 3 மாதத்தில்  1 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்  ஸ்டாலின் துவக்கி வைத்தார்



முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை தலைமையிட வளாகத்தில், கருணாநிதி நினைவாக ஒரு லட்சம் தலமரக்கன்றுகள் நடும் திட்டத்தைத் தொடங்கி வைக்கும் அடையாளமாக, நாகலிங்க மரக்கன்றை நட்டு திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்து சமய அறநிலையத் துறை, பக்தர்களின் வசதிக்காகப் பல்வேறு நலத்திட்டங்களைச் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டில் கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களில் ஒரு லட்சம் தலமரக்கன்றுகள் நடுவதற்கான திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கோயில் தோன்றுவதற்கு முன்பே இருப்பதால், அம்மரம் தலமரம் எனப் போற்றப்படுகிறது. திருக்கோயில்களில்அந்தந்த தலமரங்களான மாமரம், புன்னை, வில்வம், செண்பகம், மருதம் போன்ற மரங்கள் நட்டுப் பராமரிக்கப்படும்.
இத்தகைய பெருமைமிகு தலமரங்களைப் போற்றி பாதுகாக்கும் நோக்கில் திருக்கோயிலுக்குச் சொந்தமான இடங்களில் ஒரு லட்சம் தலமரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை மூன்று மாதக் காலத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி. சந்தரமோகன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஜெ. குமரகுருபரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

Tags :

Share via