கொரோனா தடுப்பூசியால் வரும் காய்ச்சலால் கர்ப்பிணிகளுக்கு ஆபத்தில்லை - டாக்டர்கள் தகவல்

by Admin / 08-08-2021 03:03:10pm
கொரோனா தடுப்பூசியால் வரும் காய்ச்சலால் கர்ப்பிணிகளுக்கு ஆபத்தில்லை - டாக்டர்கள் தகவல்

 

கொரோனா தடுப்பூசி பயம் பெரும்பாலும் 3 மாத கர்ப்பமாக இருக்கும் பெண்களிடம் அதிகமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. முதலில் முன்களப்பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டது. அதன் பின் படிப்படியாக வயது வாரியாக பொதுமக்களுக்கு செலுத்த அனுமதிக்கப்பட்டது.

சமீபத்தில் கர்ப்பிணி பெண்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் காய்ச்சல், தலைவலி போன்ற பாதிப்புகள் 1 முதல் 2 நாட்களுக்கு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. அதேபோல் கொரோனா தடுப்பூசியால் கர்ப்பிணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் இதனால் அச்சப்பட தேவை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஆனாலும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள கர்ப்பிணிகளிடம் தயக்கம் நிலவி வருகிறது. தடுப்பூசி போட்டுக்கொள்வதால் வரும் காய்ச்சலால் கர்ப்பிணிகளிடம் ஒருவித அச்சம் இருப்பது தெரிய வந்துள்ளது.

இதனால் அவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்த ஆர்வமாக முன்வருவதில்லை. நாடு முழுவதும் குறைந்த அளவிலான கர்ப்பிணிகளே இதுவரை தடுப்பூசியை செலுத்தி உள்ளனர்.

இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதால் வரும் காய்ச்சலால் கர்ப்பிணிகளுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாது என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக மும்பையை சேர்ந்த டாக்டர் நிகில் டாதர் கூறியதாவது:-

கர்ப்பிணிகள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தயக்கம் காட்டுவதற்கு காய்ச்சல் ஒரு பெரிய காரணமாக இருக்கிறது. தடுப்பூசிக்கு பிந்தய காய்ச்சல் கர்ப்பிணிகளுக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது. தடுப்பூசிக்கு பிறகு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி தூண்டப்படுவதால் காய்ச்சல் ஏற்படுகிறது. இது பெரும்பாலும் பாதிப்பில்லாதது.

தொற்று நோய்க்கு பிறகு ஒருவருக்கு ஏற்படும் காய்ச்சலுடன் அதை ஒப்பிட்டு பார்த்து குழப்பக்கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல் மற்றொரு டாக்டர் சுதிர் நாயக் கூறும் போது, ‘கொரோனா தடுப்பூசி பயம் பெரும்பாலும் 3 மாத கர்ப்பமாக இருக்கும் பெண்களிடம் அதிகமாக இருக்கிறது. அவர்கள் 2-வது தடுப்பூசி டோஸ் செலுத்திக் கொள்ளும் போது 6 மாத கர்ப்பமாக இருக்கும் என்பதால் பயப்படுகிறார்கள்.

நாங்கள் அவர்களிடம் கூறுவது வழக்கமான சளி, இருமலின் போது அவர்களுக்கு ஏற்படும் காய்ச்சலில் இருந்து தடுப்பூசியால் வரும் காய்ச்சல் வித்தியாசமாக இருக்காது’ என்றார்.

மும்பையை சேர்ந்த சுகாதார அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘தடுப்பூசிக்கு பிறகு காய்ச்சல் வருவது பெரும்பாலானோருக்கு கவலையாக இருக்கிறது. இது லேசானது மற்றும் ஓரிரு நாட்களில் சரியாகிவிடும் என்று ஆலோசனை வழங்குகிறோம். ஆனாலும் அவர்களிடம் தயக்கம் நிலவி வருகிறது’ என்றார்.

 

Tags :

Share via