சூரப்பா மீதான விசாரணை அறிக்கையை முதலமைச்சரிடம்  தாக்கல் செய்தார் நீதிபதி கலையரசன்

by Editor / 09-08-2021 04:49:04pm
சூரப்பா மீதான விசாரணை அறிக்கையை முதலமைச்சரிடம்  தாக்கல் செய்தார் நீதிபதி கலையரசன்



முன்னாள் துணை வேந்தர் சூரப்பா மீதான முறைகேடு புகார் குறித்த விசாரணை அறிக்கையை நீதியரசர் கலையரசன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல் செய்தார்.


அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த சூரப்பா கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நியமனம் செய்யப்பட்டார். இந்த துணைவேந்தர் பதவிக்கு அப்போது விண்ணப்பித்த 170 பேரில், சூரப்பாவை பல்கலைக்கழகங்களின் வேந்தரும், தமிழக கவர்னருமான பன்வாரிலால் புரோகித் தேர்வு செய்திருந்தார்.


அதற்கு அப்போதே பல அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் சூரப்பா, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பொறுப்பை ஏற்றுக்கொண்டு பணியாற்றினார். பல்கலைக்கழக ரீதியாக தொடர்ந்து பல்வேறு விதமான குற்றச்சாட்டுகள் அவர் மீது வைக்கப்பட்டன.


அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர்கல்வி சிறப்பு நிறுவனம் என்ற சிறப்பு அந்தஸ்தை பெறுவதில், மாநில அரசுக்கும், இவருக்கும் இடையே பல்வேறு மோதல்கள் எழுந்தன. அதனைத் தொடர்ந்து அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி என்ற அரசின் அறிவிப்பை எதிர்த்து, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலுக்கு கடிதம் எழுதியது என பல்வேறு விஷயங்களில் சூரப்பா பெரிதும் பேசப்பட்டார்.


அவர் மீது தொடர்ச்சியாக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும், அண்ணா பல்கலைக்கழகத்தில் அவர் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்தார் என்ற நற்பெயரும் அவருக்கு இன்றளவும் இருக்கிறது. இதற்கிடையில் அவர் மீது ஊழல் புகார் எழுந்ததையடுத்து, அதுகுறித்து சென்னை ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் விசாரணை நடத்தி வந்தார்.


இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான முறைகேடு புகார் குறித்த விசாரணை அறிக்கை சென்னை தலைமை செயலகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நீதிபதி கலையரசன்  தாக்கல் செய்துள்ளார்.இந்த அறிக்கையின் அடிப்படையில் துணைவேந்தர் சூரப்பா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags :

Share via