கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு: இளம்பெண் தற்கொலை - வாலிபருக்கு தீவிர சிகிச்சை

by Admin / 09-08-2021 04:49:37pm
கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு: இளம்பெண் தற்கொலை - வாலிபருக்கு தீவிர சிகிச்சை

கோவை அருகே கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 5-வது வீதியில் தனியார் லாட்ஜ் ஒன்று உள்ளது. இந்த லாட்ஜ்க்கு கடந்த மாதம் 26-ந் தேதி கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த முஸ்தபா (வயது 58) மற்றும் பிந்து (46) ஆகியோர் வந்தனர்.

அவர்கள் தங்களை கணவன்-மனைவி என அறிமுகப்படுத்திக் கொண்டு தொழில் வி‌ஷயமாக கோவை வந்திருப்பதாகவும், தங்களுக்கு தங்குவதற்கு ஒரு அறை வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர். அவர்களுக்கு லாட்ஜின் 3-வது மாடியில் ஒரு அறை ஒதுக்கி கொடுக்கப்பட்டது.

அந்த அறையில் முஸ்தபாவும், பிந்துவும் தங்கியிருந்தனர். அடிக்கடி அவர்கள் வெளியிடங்களுக்கு சென்று வந்தனர். இதனால் லாட்ஜ் ஊழியர்கள் எந்தவித சந்தேகமும் இன்றி இருந்தனர்.

இந்தநிலையில் நேற்று அவர்கள் தங்கியிருந்த அறையில் இருந்த துர்நாற்றம் வீசியது. அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர். அங்கு பிந்து அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். முஸ்தபா கை, கால், கழுத்து பகுதியில் வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

இதுபற்றி லாட்ஜ் ஊழியர்கள் காட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து முஸ்தபாவை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. பிந்துவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

போலீசார் நடத்திய விசாரணையில் முஸ்தபாவும், பிந்துவும் கள்ளக்காதலர்கள் என்பது தெரியவந்தது. இருவரும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள். 2 பேருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். கள்ளக்காதலர்களான இவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.

இதை அறிந்த 2 பேரின் குடும்பத்தினர் அவர்களை கண்டித்துள்ளனர். எதிர்ப்பையும் மீறி அவர்கள் உல்லாசத்தில் திளைத்துள்ளனர். எதிர்ப்பு வலுக்கவே தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை வந்துள்ளனர்.

கோவை வந்து லாட்ஜில் அறை எடுத்து தங்கிய பிறகு தற்கொலை செய்வதா, வேண்டாமா? என இருமனதாகவே 2 பேரும் இருந்துள்ளனர். இதனால் ஒரு வாரத்துக்கும் மேலாக லாட்ஜிலேயே தங்கியிருந்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் பிந்து, தன்னை தானே கத்தியால் வெட்டி தற்கொலை செய்துள்ளார். அதன்பிறகே முஸ்தபாவும் கத்தியால் வெட்டி தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் பிழைத்துக் கொண்டார்.

பிந்து இறந்தபிறகு அவர் பிணத்துடன் முஸ்தபா 2 நாட்கள் தங்கியிருந்ததாகவும், அதன்பிறகே அவர் தற்கொலை முடிவை எடுத்ததாகவும் கூறப் படுகிறது. இது உண்மை தானா? அல்லது 2 பேரும் ஒரே நேரத்தில் தற்கொலைக்கு முயன்றார்களா? என்பது குறித்து முஸ்தபாவிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

இதற்கிடையே தற்கொலை செய்த பிந்து மற்றும் உயிருக்கு போராடும் முஸ்தபாவின் குடும்பத்தினருக்கு கோவை போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் கோவை வரும்பட்சத்தில் கள்ளக்காதல் ஜோடி குறித்த மேலும் தகவல்கள் தெரியவரும்.

 

Tags :

Share via