அசாமில் இரு படகுகள் மோதி விபத்து : 33 பேர் மாயம்

by Editor / 10-09-2021 11:19:05am
அசாமில் இரு படகுகள் மோதி விபத்து : 33 பேர் மாயம்

அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா நதியின் கரையோரத்தில் உள்ள தீவு மஜூலி. உலகில் மக்கள் அதிகம் வாழும் தீவுகளில் இந்த மஜூலி தீவும் ஒன்றாகும்.

இந்த தீவில் இருந்து மக்கள் பிரம்மபுத்திராவின் தெற்கு கரையான ஜோர்ஹாத் நகரத்தில் உள்ள நீமதிகத்திற்கு வருவதற்கு நீர்வழிப் போக்குவரத்து மட்டுமே உள்ளது. இதற்காக, அவர்கள் படகுகள் மற்றும் நாட்டுப்படகுகளை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், வழக்கம்போல பயணிகள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், இரு சக்கர வாகனங்களை ஏற்றிக்கொண்டு படகு ஒன்று ஆற்றில் சென்று கொண்டிருந்தது. அந்த படகில் சுமார் 120 பயணிகள் பயணம் செய்தனர். மஜூலி தீவில் இருந்து சரியாக 1.5 கிலோமீட்டர் தொலைவில் சென்று கொண்டிருந்தபோது, அங்கே வந்து கொண்டிருந்த மற்றொரு படகுடன் இந்த படகு மோதியது.

திடீரென ஏற்பட்ட இந்த விபத்தாலும், ஏற்கனவே படகில் பயணிகள் மற்றும் வாகனங்கள், சரக்குகள் இருந்ததாலும் படகு திடீரென கவிழ்ந்தது. இதனால், கவிழ்ந்த படகில் இருந்த பெண்கள் உள்பட பயணிகள் தங்களது பயத்தில் அலறினர். உடனடியாக தங்களது உயிரை காப்பாற்ற பெண்கள் உள்பட பலரும் ஆற்றில் குதித்தனர். அவர்களை மற்றொரு படகில் இருந்தவர்கள் காப்பாற்ற முயற்சித்தனர். ஆனாலும், படகு வேகமாக நீரில் மூழ்கியதால் பலரும் படகுடன் சேர்ந்தே நீரில் மூழ்கினர். இதையடுத்து, உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து மாநில பேரிடர் மீட்புத்துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

நேற்று இரவு நிலவரப்படி, படகில் பயணித்த 42 பேர் மீட்கப்பட்டு இருந்தனர். 4 பேரை காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், நேற்று இரவு முதல் தேசிய பேரிடர் மீட்பு படையினரும், மாநில பேரிடர் மீட்பு படையினரும் தொடர்ந்து படகில் இருந்த பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Tags :

Share via