11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

by Editor / 03-10-2021 05:15:15pm
 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் புவியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நீலகிரி, கோவை, ஈரோடு, புதுக்கோட்டை ஆகிய 11 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளை புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய இடங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, கோவை, நீலகிரி, ஈரோடு, மதுரை, விருதுநகர், திருச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

5 ந்தேதி தென் மாவட்டங்கள், அரியலூர், பெரம்பலூர், கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிக கன மழையும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கரூர், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கன மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசான முதல் மிதமான மழைபெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு விவரம் வருமாறு:

கன்னியாகுமரி 10 செ.மீ., கோத்தகிரி, மணப்பாறை தலா 9 செ.மீ., தோகைமலை, அவிநாசி, மணமேல்குடி, கலசப்பாக்கம் தலா 7 செ.மீ., மேட்டுப்பாளையம், வேப்பூர், மதுராந்தகம், ராதாபுரம் தலா 6 செ.மீ., சத்தியமங்கலம், வேடசந்தூர், திருத்துறைப்பூண்டி, மடத்துக்குளம் தலா 5 செ.மீ., கொட்டாரம், இல்லயான்குடி, மயிலாடுதுறை, புதுச்சேரி, செஞ்சி தலா 4 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via