சென்னையில் வன உயிரின பாதுகாப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

by Editor / 03-10-2021 05:16:52pm
சென்னையில் வன உயிரின பாதுகாப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

சென்னை பெசன்ட்நகர் பேருந்து நிலையம் அருகில் இன்று (3 ந் தேதி) வனத்துறை சார்பில் நடைபெற்ற வன உயிரின வாரவிழாவின் இரண்டாம் நாளில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான சைக்கிள் பேரணியை சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் சுப்ரியா சாஹு கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தமிழகத்தில் வனப்பரப்பை 33 சதவீதம் உயர்த்திடவும், வனப்பகுதிகளில் அதிக அளவு மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கவும், வனப்பாதுகாப்பு, மனித-வன உயிரின மோதல் தடுப்பு நடவடிக்கை, வனவிலங்குகளால் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்புகளை தடுத்திட வனப்பணியாளகள் குழு அமைத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

புலிகள், யானைகள் காப்பகப்பகுதி களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிடவும், கோடைகாலத்தில் வனவிலங்குகளுக்கு ஆங்காங்கு தண்ணீர் தொட்டி அமைத்திடவும், காட்டுத்தீயினை கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வனத்துறை மேற்கொள்ளும் வனப்பரப்பை அதிகப்படுத்துதல் மற்றும் வன விலங்குகளை பாதுகாக்கும் பணியில் பொதுமக்களும் பங்கேற்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான சைக்கிள் விழிப்புணர்வு பேரணியை முதன்மைச் செயலாளர் சுப்ரியா சாஹு துவக்கி வைத்தார். சைக்கிள் பேரணி முடிவில் பங்கேற்ற அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் மற்றும் டி சர்ட் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் (துறைத் தலைவர்) அசோக் உப்ரேதி, கூடுதல் முதன்மை தலைமை (வன விலங்குகள்) பாதுகாவலர் ஆகாஷ் பர்வா, கூடுதல் முதன்மை தலைமை வன பாதுகாவலர் நாகநாதன், சென்னை மண்டல வனப்பாதுகாவலர் கீதாஞ்சலி, சென்னை மாவட்ட வனப் பாதுகாவலர் பிரியதர்ஷினி, மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

Tags :

Share via