100 நாள் வேலை திட்ட விவகாரம்: சீமான் பேச்சுக்கு எதிர்ப்பு

by Editor / 04-10-2021 10:13:18am
100 நாள் வேலை திட்ட விவகாரம்:  சீமான் பேச்சுக்கு எதிர்ப்பு

100 நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியிருப்பது அரைவேக்காட்டுத்தனமானது என்று தமிழ்நாடு விவசாய சங்கத்தின் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் சாடியுள்ளார்.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் தீக்கதிர் நாளேட்டில் பெ.சண்முகம் எழுதிய கட்டுரை: "விவசாயத்தைக் காப்பாற்ற வேண்டு மென்றால் 100 நாள் வேலைத்திட்டத்தை ஒழிக்க வேண்டும்" - இது நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர்களின் கண்டுபிடிப்பு. உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்திலும் இதை முன்னிறுத்தி அவர் பிரச்சாரம் செய்வதாக தெரிவித்தார்கள். இந்திய ஒன்றிய பாஜக அரசாங்கமும் நூறுநாள் வேலைத்திட்டத்தை ஒழிக்க வேண்டுமென்று தான் சொல்லிக் கொண்டிருக்கிறது. அந்த நோக்கத்தோடு தான் இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை தொடர்ந்து குறைத்து வருகிறது. கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் ஒரே அரசு திட்டம் இதுதான். பல கோடிக்கணக்கானோருக்கு வேலை வழங்கும் ஒரே திட்டமும் இதுதான். இத்திட்டத்திற்கு எதிராக முதலில் நிலவுடமையாளர்கள் பேசினார்கள். பிறகு மத்திய அமைச்சர்கள் பேசினார்கள். இப்போது சீமான் போன்றவர்கள் பேசுகிறார்கள்.

நூறுநாள் வேலைத்திட்டத்தில் விவசாய தொழிலாளர்கள், சிறு-குறு விவசாய குடும்பத்தைச் சார்ந்த பெண்கள் தான் ஏறத்தாழ 80 சதம் ஈடுபடு கிறார்கள். ஓரளவு வயதானவர்கள். விதவைகள், குடும்பத்தினரின் ஆதரவை இழந்தவர்கள் சுதந்திர மாகவும், சுயேச்சையாகவும் உழைத்து வாழ்வதற்கான திட்டமாக இது விளங்குகிறது. நீர்நிலை பராமரிப்பு, மரங்களை நட்டுவளர்த்தல், கிராமப்புற சாலைகள் அமைத்தல், அரசின் நிதிஉதவியுடன் கூடிய கட்டுமானங்கள், கழிப்பறைகள் என இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. கேரள மாநிலத்தில் இத்திட்டப் பயனாளிகள் விவசாயப் பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறார்கள்.

விவ சாயத்தைக் காப்பதுதான் சீமானின் நோக்கமென்றால் முதலில் ஒழிக்க வேண்டியது மோடி ஆட்சி என்று தான் அவர் சொல்லியிருக்க வேண்டும். நீடித்து நடை பெற்று வரும் நாடு தழுவிய விவசாயிகள் போராட்டத்தை உதட்டளவில் கூட ஆதரிக்காத நபர் விவசாயத்தைக் காப்பாற்றப் போகிறாராம். கேழ்வரகில் நெய் வடிகிற தென்றால் கேட்பவனுக்கு புத்தி எங்கே போயிற்று என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது. "நாம் தமிழர்" என்று பெயர் வைத்திருப்பதால் இவர் அனைத்துத் தமிழர்களுக்குமான தலைவர் என்று அர்த்தமாகிவிடாது.

விவசாயி சின்னம் இவர்களுடைய தேர்தல் சின்னம் என்பதால் இவர் விவசாயிகளின் நண்பன் என்று அர்த்தம் கிடையாது என்பதுதான் பேட்டியின் மூலம் அவர் வெளிப்படுத்தியிருக்கும் செய்தி. தமிழக மக்களே, இத்தகைய நபர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். உறவாடிக் கெடுக்கும் கெடுமதியாளர்கள் என்பதை உணர்ந்து விழிப்பாக இருக்க வேண்டியது நமது கடமை. இவ்வாறு பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via