தனியார் மருத்துவமனையின்  தவறான சிகிச்சையால், 7 வயது சிறுமி பலி? 

by Editor / 06-10-2021 05:30:21pm
தனியார் மருத்துவமனையின்  தவறான சிகிச்சையால், 7 வயது சிறுமி பலி? 

சென்னை தனியார் மருத்துவமனையின் தவறான சிகிச்சையால், சிறுமி உயிரிழந்ததாக புகார் தெரிவித்துள்ள பெற்றோர், மருத்துவமனையை முற்றுகையிட்டதுடன், போலீசிலும் புகார் அளித்துள்ளனர்.


சென்னை பொன்னேரி, எம்.ஜி.ஆர்., நகர் பகுதியை சேர்ந்தவர் குமார், இவரது மகள் லக்ஷிதா, (7). பள்ளியில், இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த மாதம், 27ம் தேதி சிறுமிக்கு காய்ச்சல் ஏற்பட்டதால், பொன்னேரி பஜார் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அடுத்த இரு தினங்களில், சிறுமி உடல் முழுதும் சிறு, சிறு கொப்பளங்கள் ஏற்பட்டு, தோல் உரிய துவங்கியது. உடனடியாக குழந்தையை அதே தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் படி பரிந்துரைத்தனர். 


அதை தொடர்ந்து, சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சையில் இருந்த சிறுமி, நேற்று முன்தினம் இறந்தார்.'தனியார் மருத்துவமனையில் சிறுமிக்கு ஹெவி டோஸ் கொடுத்ததே உயிரிழப்புக்கு காரணம்' என, அரசு மருத்துவமனை டாக்டர்கள் வாய்மொழியாக கூறியதாக, பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். இதனால், ஆத்திரம் அடைந்த உறவினர்கள் நள்ளிரவில், மருத்துவமனையை முற்றுகையிட்டு, கண்ணாடிகளை உடைத்தனர். பின், இது தொடர்பாக, பொன்னேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானதும், விசாரணை தீவிரப்படுத்தப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via