குலோப் ஜாமுனில் கரப்பான் பூச்சி.. 55 ஆயிரம் ரூபாய் இழப்பீடு

by Editor / 08-10-2021 10:21:16am
குலோப் ஜாமுனில் கரப்பான் பூச்சி.. 55 ஆயிரம் ரூபாய் இழப்பீடு

பெங்களூருவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வழங்கப்பட்ட குலோப் ஜாமுனில் கரப்பான்பூச்சி கிடந்த விவகாரத்தில், பாதிக்கப்பட்ட நபருக்கு 55 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கும்படி ஹோட்டல் நிர்வாகத்துக்கு மாநில நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம் உத்தரவிட்டது. கர்நாடகாவின் பெங்களூருவைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் ராஜண்ணா. இவர், மாவட்ட நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: "கடந்த 2016ல் பெங்களூருவின் காந்திநகரில் உள்ள காமத் ஹோட்டலில் சிற்றுண்டி சாப்பிட நண்பருடன் சென்றேன்.

இரண்டு தோசை மற்றும் குலோப் ஜாமுன் ஆர்டர் செய்தேன். குலாப் ஜாமுன் கிண்ணத்தில் கரப்பான்பூச்சி செத்துக் கிடந்தது. அதை படம்பிடிக்க முயன்ற போது, சர்வர், என்னிடம் இருந்த மொபைல் போனை பறிக்க முயன்றார். எனவே, இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பிட்டிருந்தார்.

மனுவை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம், பாதிக்கப்பட்ட வழக்கறிஞருக்கு 55 ஆயிரம் ரூபாய் இழப்பீடு அளிக்கும்படி ஹோட்டல் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து கர்நாடக மாநில நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தில் ஹோட்டல் நிர்வாகம் மேல்முறையீடு செய்தது. அதில் சம்பவம் நடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பின் பணம் பறிக்கும் நோக்கத்துடன் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. மனுவை விசாரித்த மாநில நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம், மாவட்ட ஆணையத்தின் உத்தரவை உறுதி செய்தது.

 

Tags :

Share via